அதிமுக தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். விரைவில் சதிவலை பின்னியவர்களுக்கு தக்க தண்டனை வழங்குவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் வெடித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக பொதுக்குழுவுக்கு பிறகு டெல்லி சென்ற அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னையில் இருந்து மதுரை வந்து அங்கிருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் செல்கிறார். இதற்காக அவரின் ஆதரவாளர்கள் பன்னீர்செல்வத்துக்கு வழி நெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பைப் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு அம்மா அவர்களின் உயிரினும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். தொண்டர்களுக்காகவே நான். தொண்டர்களுடனே நான் என்றும் இருப்பேன். தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, புரட்சித் தலைவர் மற்றும் அம்மா 50 ஆண்டு காலம் இந்த இயக்கத்தை மனிதாபிமான இயக்கமாக, தமிழக மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று 30 ஆண்டுகாலம் தமிழகத்தில் முதலமைச்சராக நல்லாட்சி நடத்தியிருக்கிறார்கள்.
இன்றைக்கு இருக்கக் கூடிய அசாதாரணமான சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டதோ, எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டதோ அவர்களுக்குக் கூடிய விரைவில் மக்களே நல்ல தீர்ப்பினை வழங்குவார்கள். அவர்கள் செய்தத் தவறுகளுக்கு தொண்டர்களே உரிய பாடம் மற்றும் தண்டனையை வழங்குவார்கள். இதய தெய்வம் அம்மாவின் இதயத்தில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது. இதை அம்மாவே கூறியுள்ளார். 2002ம் ஆண்டு அம்மா மீண்டும் முதல்வராக பதவியேற்றபோது, ‘பன்னீர்செல்வம் போன்ற தொண்டரை பெற்றது என் பாக்கியம்.’ என அம்மா அவர்களே எனக்கு சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்றார்.
-ம.பவித்ரா







