அதிமுக துணைத் தலைவர் விவகாரம்: ஜனநாயக ரீதியில் நடவடிக்கை இருக்கும் – அப்பாவு

அதிமுக துணை தலைவர் விவகாரத்தில் கொறடா கொடுத்த மனு மீதான நடவடிக்கைகள் சிறப்பான முறையில் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கையாக இருக்கும் என திருநெல்வேலியில் சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். வ.உ.சிதம்பரனாரின் 151 வது…

அதிமுக துணை தலைவர் விவகாரத்தில் கொறடா கொடுத்த மனு மீதான நடவடிக்கைகள் சிறப்பான முறையில் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கையாக இருக்கும் என திருநெல்வேலியில் சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

வ.உ.சிதம்பரனாரின் 151 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை ஸ்ரீபுரம்
பகுதியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது
திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக முதலமைச்சர் அறிவித்தபடி 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வ உ சி மணிமண்டபத்தில் ஒலி, ஒளி காட்சிகள் மூலம் வரலாற்றை அனைவரும் காணும் வகையிலான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வஉசி 150வது பிறந்த நாள் விழா மற்றும் பாரதியார் 100வது நினைவு தினம் ஆகியவற்றையொட்டி அவர்கள் இருவர் படித்த பள்ளியில் ஒருகோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நினைவு வளைவு முதலமைச்சர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட உள்ளது. வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரது தியாகங்களை நினைவுபடுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது பெருமைப்படுத்த உரியதாக உள்ளது.

அதிமுக விவகாரம் நாட்டுக்கு முக்கியமான விசயமல்ல. அதிமுகவில்
நடப்பது உட்கட்சி விவகாரம். அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும்
கிடையாது. அதிமுகவில் பல பிரிவுகளாக அவர்கள் உள்ளனர். எந்த பிரிவு சரி தவறு
என்பது குறித்து நீதிமன்றத்தை அவர்கள் நாடி உள்ளனர். அதற்கு மேல் தேர்தல்
ஆணையம் உள்ளது. அதிமுக கொறடா கொடுத்த மனு மீதான நடவடிக்கை சட்டமன்றம் நடக்கும்போது தெரியும் என தெரிவித்தார்.

இந்த ஆட்சியில் சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக துணை தலைவர் விவகாரத்தில் சரியான முறையில் ஜனநாயக நடவடிக்கையின் அடிப்படையில் முடிவுகள் இருக்கும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.