நாடாளுமன்றத் தேர்தலை முன் வைத்தே தமிழகத்தில் மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
டெல்லியில் 38 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடியின் அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தேசிய அளவில் அதிமுகவுக்கு பாரதிய ஜனதா கட்சி அளித்துள்ள முக்கியத்துவம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டியுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று தமிழகம் திரும்பிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது ;
தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டமைப்பு கூட்டம் கூட்டியிருக்கிறது. அதில் இடம் பெற்றிருக்கின்ற அனைத்து கட்சிகளும் கூடி கருத்துக்களை தெரிவித்து இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் கூட்டம் போட்டதற்காக நாங்கள் கூட்டம் போடவில்லை. ஏற்கனவே திட்டமிடப்பட்டு தேதி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட கூட்டம் தான் இது.
அதிமுகவில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்கனவே இருக்கும் உறுப்பினர்கள் புதுப்பித்தல் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.நேற்றைய தினம் வரை 1.7 2 கோடி உறுப்பினர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். எங்களுடைய இலக்கு 2 கோடி. நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை பணிகள் ஆங்காங்கே துவங்கியிருக்கிறது. இன்னும் நேரம் இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியும் தலைவர்கள் அந்தந்த மாநிலத்தில் தேர்தலுக்கு தேவையான பணிகளை செய்து வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துகின்றார். இன்னும் கணக்கு எடுத்து முடிக்கவில்லை. பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் இந்த நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவர்களுக்கும் வழங்கப்படும் என்றுதான் சொன்னார்கள்.
அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அவர் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பானது. முன்னாடியே அமலாக்கத்துறை வந்திருக்க வேண்டும். ஆனால் காலம் தாமதமாக வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை. 25 இடங்களில் போட்டி என பாஜக சொல்லி வருவது, அக்கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்காக சொல்வது.
திமுக அரசு மட்டும் தான் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு. ஸ்டாலின் அதைப் பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது. அதிமுகவில் அமைச்சர் ஒருவர் மீது புகார் வந்த பொழுதும் நீக்கப்பட்டார். ஆனால் இன்றைக்கு செந்தில் பாலாஜி, முதலமைச்சர் ஸ்டாலினை நிறைய கவனித்திருக்கிறார். அவர் ஏதாவது வாயை திறந்து சொல்லிவிட்டால் என்ன செய்வது என பயந்து போய் அவரை இரவோடு இரவாக சந்திக்கின்றனர். ஆறுதல் சொல்வதற்காக போகவில்லை. ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் போயிருக்கின்றனர். இதுதான் உண்மை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இப்போது சந்தி சிரிக்கிறது. உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் சாதாரண மக்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். டிஐஜி தற்கொலை விவகாரத்தில் மருத்துவருக்கு சம்மன் அனுப்பாதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்.
பஞ்சாலைகள் அதிகம் இருக்கக்கூடிய பகுதி் கார்மெண்ட்ஸ் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி கோவை. ஜவுளி தொழில் அதிகமாக இருக்கக் கூடிய இந்த பகுதி இன்று நலியுடைய சூழ்நிலை இருக்கிறது. மறுசுழற்சி கூட்டமைப்பு கோரிக்கை அரசின் கவனத்திற்கு வைத்திருக்கிறார்கள். மறுசுழற்சி கூட்டமைப்பு மற்றும் சிறுகுறு பஞ்சாலைகள் தமிழக அரசிடம் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். இது தொடர்பாக நான் அறிக்கை கொடுத்து 12 நாட்களுக்கு மேலாகியும் திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து நாளை அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா









