அதிமுக தலைமை அலுவலகத்தை சீரமைக்கும் பணி தீவிரம்: விரைவில் பொறுப்பேற்கவுள்ளார் இபிஎஸ்

கலவரத்தினால் சேதமடைந்த அதிமுக தலைமை அலுவலகத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் சென்று பொறுப்பேற்க உள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த அதிமுக செயற்குழு…

கலவரத்தினால் சேதமடைந்த அதிமுக தலைமை அலுவலகத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் சென்று பொறுப்பேற்க உள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில்
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு
செய்யப்பட்டார். அதே பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவருடைய
ஆதரவாளர்கள் அடிப்படை பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். பொதுக்குழு
நடைபெற்ற அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி
பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த மேஜைகள், நாற்காலிகள் சூறையாடப்பட்டன.

இது தொடர்பாக இரு தரப்பும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம்
சாவியை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக அலுவலகம் திறக்கப்பட்டு சேதமடைந்த பொருட்களின் விவரங்கள்
கணக்கெடுக்கப்பட்டது. அதோடு, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை
காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்தை மறுசீரமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. தரை தளம், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் சேதமடைந்த பொருட்களுக்கு பதிலாக புதிய பொருட்களை வாங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற்குள் சீரமைப்புப் பணி நிறைவடைந்த பின்னர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்க எடப்பாடி பழனிசாமி
அதிமுக அலுவலகம் வர உள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.