அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு விசாரணையை தள்ளிவைக்கக்கூடாது என இபிஎஸ் தரப்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு, ஜுலை 11ம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில், ஒற்றைத் தலைமை உள்பட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
இதனை எதிர்த்தும், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தனிநீதிபதி தள்ளுபடி செய்தார். தொடர்ந்து தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர், உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வில் மேல்முறையீடு செய்தனர்.
அதனை விசாரித்த நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் வழக்கை ஒருவாரம் ஒத்திவைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, வழக்கை ஒத்திவைக்கக்கூடாது எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்துள்ளார்.







