அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில், 2016 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2021 மார்ச் 31ஆம் தேதி வரை வருமானத்திற்கு அதிகமாக சி.விஜயபாஸ்கர் 51 கோடியே 35 லட்சம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது மனைவி ரம்யாவும் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சம் மதிப்பிலான சொத்துகளை குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வேல்ஸ் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக மருத்துவமனைக்கு Essentiality Certificate வழங்கியுள்ளார். இது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய நகரங்களில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்து தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தபணி வழங்கிய வகையில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்ப்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.







