பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவின் கட்சியைச் சேர்ந்த 3 எம்பிக்கள், ஒரு எம்எல்சி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
பிகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலுபிரசாத் யாதவ், மன்மோகன் சிங் அமைச்சரவையில் கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக இருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, பிகாரைச் சேர்ந்த பலரிடம் நிலத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ரயில்வே பணி வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா யாதவ், ஹேமா யாதவ் ஆகியோர் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிகார் தலைநகர் பாட்னாவில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 292 சதுர அடி நிலங்கள் இவ்வாறு பெறப்பட்டுள்ளதாகவும், இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.4.39 கோடி என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த ஊழலில், லாலுவுக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஊழல் வழக்கு தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சுனில் சிங், எம்பிக்கள் அஷ்ஃபக் கரிம், ஃபையாஸ் அகமது, சுபோத் ராய் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிகாரில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள மகா கூட்டணி, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை இன்று நிரூபிக்க உள்ள நிலையில், வேண்டும் என்றே மத்திய அரசு இந்த சோதனையை நடத்தி வருவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா குற்றம் சாட்டியுள்ளார். இது சிபிஐ சோதனை அல்ல என்றும் பாஜகவின் சோதனை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
எனினும், இதுபோன்ற சோதனைகளால் பாஜக எதையும் சாதிக்க முடியாது என்றும், தங்கள் கட்சித் தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணி வெற்றிகரமாக ஆட்சியை நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பிகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இந்த ஊழல் குறித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசி இருப்பதாகவும், இந்த ஊழல் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்ததாகவும் சஞ்சய் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.