முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் உரக்கடைகளுக்கு வேளாண்துறை எச்சரிக்கை

விவசாயிகள் உரங்களை தனியார் உரக்கடைகளில் வாங்கும்போது பிற உரங்களையோ / இடுபொருட்களையோ கட்டாயம் வாங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கக் கூடாது என தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வேளாண்மை – உழவர் நலத்துறை விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சம்பா (இராபி) பருவத்தில் 13.747 இலட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டதில், இதுநாள் வரை 9.717 இலட்சம் எக்டர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பா நடவுப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், குறித்த காலத்தில் உரங்களை விநியோகிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரக்கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு உரம் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் தாங்கள் தனியார் உரக்கடைகளில் உரங்கள் வாங்கும் போது, தனியார் உரக்கடை நிறுவனத்தினர் விவசாயிகள் கேட்காத பிற உரங்களை / இடுபொருட்களை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனவே, தனியார் உரக்கடை உரிமையாளர்கள் யாரும் விவசாயிகள் கேட்காத உரங்களை வாங்க நிர்ப்பந்திக்கக் கூடாது என எச்சரிக்கப்படுகிறார்கள். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அறிவுரையின்படி 28.10.2021 அன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் தனியார் மற்றும் கூட்டுறவு உரக்கடை உள்ளிட்ட 3,040 உரக்கடைகளில் வேளாண்மைத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இணைந்த சிறப்புக் குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் உரம் இருப்பு, நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்களை விற்பனை செய்தல் மற்றும் விற்பனை முனைய கருவியின் வாயிலாக பட்டியலிட்டு உரங்களை விற்பனை செய்தல் மற்றும் உரம் பதுக்கல் முதலான பணிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

உரம் இருப்பு மற்றும் விற்பனை விலை குறித்த தகவல் பலகை பராமரிக்காத 20 உரக் கடைகள் எச்சரிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் ஆட்சியர் முன்னிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 44 கூட்டுறவு உள்ளிட்ட உரக்கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் அரசு வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றாமல் உரம் விற்பனை செய்த 20 உரக்கடை உரிமையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985– ன் படி விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இதுபோன்று, இதர மாவட்டங்களில், புத்தக இருப்பு மற்றும் விற்பனை முனைய கருவியில் உள்ள இருப்பிற்கும் வித்தியாசம் காணப்பட்ட 19 உரக் கடைகளின் உரிமையாளர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

கணக்கில் வராத கூடுதலாக உரம் இருப்பு வைத்துள்ள 7 உரக்கடை உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்கும் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

​உர இருப்பு வித்தியாசம், சரியாக இருப்பு பதிவேடுகள் பராமரிக்காமை மற்றும் “O” படிவம் ஒப்புதல் பெறாமல் உரம் விற்பனை செய்தல் ஆகிய குறைபாடுகளுக்காக 64 உரக்கடைகளுக்கு தற்காலிக விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசிற்கு அக். 22ஆம் தேதி எழுதிய கடிதத்தினை தொடர்ந்து ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு நவம்பர் மாதத்திற்கு தேவையான யூரியா 1,24,750 மெ.டன், டிஏபி 34,350 மெ.டன், பொட்டாஷ் 11,500 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 85,900 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நவம்பர் மாதத்தில் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி சீராக கிடைத்திட உரக்கடைகளில் ஆய்வு, செய்து தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் 15 ஆயிரத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

Ezhilarasan

வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு: விக்கிரமராஜா

Halley karthi

விவசாயிகள் யார் வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ளலாம்: அமைச்சர் ஐ.பெரியசாமி