கூடலூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள செறுமுள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லஞ்சம் மற்றும் முறைகேடுகளை கண்டித்து நிர்வாக குழு உறுப்பினர்களை அழைக்காத தலைவர் மற்றும் செயலாளர், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாக இயக்குனர்களை மட்டும் ரகசியமாக அழைத்து கூட்டம் நடத்துகிறார்கள் என்றும் அவர்களின் வீடுகளுக்குச் சென்று கையெழுத்து வாங்குகிறார் என்பதையும் கண்டித்து ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும் சங்க உறுப்பினர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என தற்போது உண்ணாவிரதப் போராட்டம் மூலம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுநாள்வரையில் சங்கத்தில் செலுத்திவரும் சேமிப்புத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.








