வேளாண் பட்ஜெட்: தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறை

விவசாயம் செழிக்கும் டெல்டா பகுதியை சேர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, விவசாயம் மீது எப்போதும் ஒரு காதல் உண்டு என்றே கூறலாம். அந்த வகையில், “காவிரி கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரை சார்ந்த எனக்கு,…

விவசாயம் செழிக்கும் டெல்டா பகுதியை சேர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, விவசாயம் மீது எப்போதும் ஒரு காதல் உண்டு என்றே கூறலாம். அந்த வகையில், “காவிரி கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரை சார்ந்த எனக்கு, தாய் தமிழ்நாட்டுக்கு சேவை செய்திட, மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி” என டெல்டா பகுதியை குறிப்பிட்டு. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், ட்விட்டர் பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டவர் மு.க.ஸ்டாலின்.

விவசாயம் மற்றும் விவசாயிகள் மீதான அவரது பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, வேளாண்மைத்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், என திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே கூறப்பட்டிருந்தது.

அதன்படி, வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று, கடந்த ஜூன் 21-ம் தேதி, சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்தார். இந்நிலையில், விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை செயல்படுத்தும் விதமாக, அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வேளாண் பட்ஜெட் தொடர்பாக, விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்களுடன் கலந்தாலோசித்திட வேண்டும் எனவும், விவசாயம் செழிக்கவும் விவசாயிகளின் உழைப்புக்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில், வேளாண் பட்ஜெட் இருக்க வேண்டும், எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் விவசாயத்தை அதிகம் மேற்கொள்ளக்கூடிய பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர், மேற்குவங்கம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா மாநிலங்களில் கூட, விவசாயத்துக்கு தனி பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மத்தியில் ரயில்வேத்துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதனை பொது பட்ஜெட்டுடன் இணைத்து ஒரே பட்ஜெட்டாக, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மாற்றியது. இந்நிலையில், விவசாய நாடான இந்தியாவில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும், என்ற கோரிக்கையை விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

தமிழ்நாட்டில் இந்த கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டு, தற்போது நடைமுறைக்கு வரவுள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 45 லட்சம் ஹெக்டேர் நிலம் விளைநிலமாக உள்ளது. இதனிடையே, வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு மாநிலத்தில் விளைநிலங்களின் பரப்பளவு அதிகரிக்கும். மேலும், விளைச்சலை அதிகரிக்க வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், அத்தொழில் சார்ந்த நிறுவனங்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் விவசாயிகளுக்கு உற்பத்தியும், வருவாயும் பலமடங்கு அதிகரித்து, வேளாண் உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு பெறும் நிலை உருவாகும். இதன் மூலம் விவசாயமும் லாபகரமான தொழிலாக மாறும். மேலும், கடந்த பட்ஜெட்டில், விவசாயத்துறைக்கு சுமார் 11,982 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தனி பட்ஜெட் காரணமாக வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

தற்போது தமிழ்நாட்டுக்கு தேவையான சர்க்கரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இச்சூழலில், புதிய வேளாண் பட்ஜெட்டால், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முறைப்படுத்தி முனைப்புடன் செயல்பட வழிவகை செய்யப்படும்.

அத்துடன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளித்து, பேரூராட்சிப் பகுதிகளில் அதை விரிவுபடுத்து வதற்கான பணிகளையும் வேளாண்மைத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் 180 உழவர் சந்தைகள் உள்ளதாகவும், அதில் 96 உழவர் சந்தைகளே செயல்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிதாக 120 உழவர்களை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, உழவர் சந்தை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள், வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு, 2021-2022-ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார். அதுபோல், தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். இதன் மூலம் விவசாயம் இனி புத்துயிர் பெறும் என்றே கூறலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.