அக்னிபாத் திட்டம் பற்றி பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் ரயில்களுக்கு தீ வைத்து எரித்ததால் அது வன்முறையாக மாறியது.
அதேநேரத்தில் அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் உள்ள முப்படைகளில் சேருவதற்கான விண்ணப்பம் குவிந்து வருகின்றன. விமானபடையில் சேருவதற்காக 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக சமீபத்தில் இந்திய விமானப்படை துறை தெரிவித்திருந்தது. இதேபோல், ராணுவத்தில் பணியாற்றவும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அக்னிபாத் திட்டத்தை பற்றி பள்ளி மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோவை மாவட்ட ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 11 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் எழுத்தியுள்ளது. அதில் அக்னிபாத் திட்டம் குறித்து பள்ளி மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது. அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு உள்ள நிலையில், பள்ளி மாணவர்களிடையே திட்டத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்







