இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.
இதில், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய மகளிர் அணி, ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
கடந்த மாதம் 23-ம் தேதி முதல் நேற்று வரை இந்தத் தொடர் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, இலங்கையின் பல்லேகெலோ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 49 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 75 ரன்களும் எடுத்து அசத்தினர்.
பூஜா வஸ்த்ராகர் 56 ரன்கள் எடுத்து அசத்தினார். விக்கெட் கீப்பர் யஸ்திகா பாடியா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இலங்கை மகளிர் அணி, எவ்வளவோ போராடியும் 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 216 ரன்களில் ஆட்டமிழந்தது.
கேப்டன் சமாரி அதபத்து 44 ரன்களும், நிலாக்ஷி டி சில்வா 48 ரன்களும் எடுத்தனர்.
ஹாசினி பெரேரா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ராஜேஸ்வரி கெய்க்வாட் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேக்னா சிங், பூஜா வஸ்த்ராகர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இவ்வாறாக இந்திய மகளிர் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரையும் 3-0 என்ற கணக்கில் வென்றது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டநாயகி விருதை வென்றார். தொடர் நாயகி விருதையும் இவரே வென்றார்.
-மணிகண்டன்








