காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுக்கு சொந்தக்காரர் – கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் …!!

காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுக்கு சொந்தக்காரரான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு. ஒரு பெரும் திரளான மக்கள் கூட்டம். காற்றில் எங்கும் முனுமுனுப்புகள். எல்லா பேனாக்களும் இரங்கற்பாக்கள் எழுதிக் கொண்டிருந்தன.…

காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுக்கு சொந்தக்காரரான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு.

ஒரு பெரும் திரளான மக்கள் கூட்டம். காற்றில் எங்கும் முனுமுனுப்புகள். எல்லா பேனாக்களும் இரங்கற்பாக்கள் எழுதிக் கொண்டிருந்தன. சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி மைதானம் முழுக்க மக்கள் ஆரவாரம். கைத்தடியோடு கூட்டத்தினரை விலக்கி விட்டு பெரியார் வந்தார்…

“இவரைப் போன்ற ஒரு தலைவர் முஸ்லிம் சமுதாயத்திற்கே கிடைப்பது அரிது.., சிறந்த பண்பாளர் மறைந்து விட்டார்” என உரக்க முழங்கி தனது இறுதி அஞ்சலியை செலுத்திவிட்டு கிளம்பினார்.

அவர் தான் காயிதே மில்லத் எனும் முஹம்மது இஸ்மாயில் சாஹிப். தனக்கு மக்கள் சூட்டிய பெயருக்கு ஏற்றவாறே தனது பண்புகளை இயல்பாக்கிக் கொண்டவர் இவர். காயிதே மில்லத் எனும் பெயருக்கு உருது மொழியில் “வழிகாட்டும் தலைவர்” என்பதுதான் பொருள். அவர் மறைந்து பல வருடங்கள் ஆன போதிலும் முஸ்லிம் கட்சிகள் மட்டுமல்லாது அனைத்து ஜனநாயக கட்சிகளும், இயக்கங்களும் அவரையும் அவர் உறுதியாக முழங்கிச் சென்ற அரசியல் கொள்கைகளையும் தவிர்த்து அரசியல் செய்ய முடியாது எனும் நிலையை உருவாக்கியுள்ளார்.

கல்வியில் புரட்சி செய்த “மகான்” :

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியா அடிமைப்பட்டு கிடந்த போது “அடிமைப்படுத்துகிறவனின் மொழியை அறவே கற்க கூடாதென” கல்வியை தூக்கி எறிந்து “ஆங்கிலம் கற்பது ஹராம் (தடுக்கப்பட்டது) ” என பள்ளிவாசல்தோறும் முஸ்லிகள் தீர்மானம் நிறைவேற்றினர். எடுத்த முடிவில் தீர்க்கமாய் நின்ற முஸ்லிம் சமூகம் கல்வியில் நூற்றாண்டு கால பின்னடைவை சந்தித்தது. இந்த பின்னடைவை சிலர் சரி செய்ய முயற்சித்தினர்.

1946-ல் அப்போதைய மெட்ராஸ் மாகாணமாக இருந்த போது காயிதே மில்லத் மெட்ராஸ் மாகாணத்தின்  சட்டப் பேரவையில் எதிர்கட்சி தலைவராக இருந்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள முகமதியன் கல்லூரியை அப்போதைய அரசு கையகப்படுத்தி அரசு பெண்கள் கல்லூரியாக மாற்ற முயற்சித்தது. காயிதே மில்லத் சாத்தியத்திற்குரிய அனைத்து வழிகளிலும் இதைத் தடுத்து நிறுத்த முயற்சித்தார். ஏமாற்றமே மிச்சமானது.

மனம் தளராத காயிதே மில்லத் அப்போதைய உள்துறை அமைச்சர் சுப்பராயனை சந்தித்து முஸ்லிம் அறக்கட்டளைக்கு சொந்தமான ஒற்றைக் கல்லூரியை கையகப்படுத்துவதால் முஸ்லிம் சமூகமே பாதிப்படையும் என முறையிட்டார். ஒற்றைக் கல்லூரிக்கு போராடுவதை விட பல கல்லூரிகளை உருவாக்கிட முயற்சிக்கலாமே என உள்துறை அமைச்சர் பதிலளிக்க தனி ஆளாய் படைதிரட்டி , சிங்கப்பூர், மலேசியா, பர்மா என பயணம் மேற்கொண்டு , பொருளாதாரம் திரட்டி விதையிட்ட கல்வி நிலையங்கள்தான் இன்று சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரியாக.., அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியாக, திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி என விருட்சமாக வளர்ந்து நிற்கின்றன.

இன்றைக்கு ஓரளவு முஸ்லிம் சமூகத்தினர் உயர் கல்வியை பெற்றதற்கு காயிதே மில்லத் உருவாக்கிய கல்லூரிகள் இன்றியமையாத காரணம். இதனை உணர்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எந்த கல்லூரியை கையகப்படுத்தக் கூடாது என காயிதே மில்லத் போராடினாரோ அதே கல்லூரிக்கு தனது ஆட்சி காலத்தில் காயிதே மில்லத்தின் பெயரை சூட்டி அகமகிழ்ந்தார்.

இந்தியா எங்கள் தாய்நாடு.., இஸ்லாம் எங்கள் வழிபாடு..!!

ஒருங்கிணைந்த இந்தியா சுதந்திரம் பெற தகித்துக் கொண்டிருந்த நேரம். இருநாடு கொள்கைகள், இரண்டு மத தலைவர்களிடமிருந்தும் துளிர் விடத் தொடங்கி இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருந்தது. மகாத்மா காந்தியும், மொளானா அபுல் கலாம் ஆசாத்தும் கடைசி வரை இரு நாடுகள் பிரிவதற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை. முஹம்மது அலி ஜின்னா , ஜவஹர்லால் நேரு இடையே பேச்சுவார்த்தை தோல்வியை தழுவவே ஜின்னா பிடிவாதமாக பாகிஸ்தான் எனும் தேசத்தை இந்திய சுதந்திரம் பெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பே கட்டமைத்துக் கொண்டார்.

அப்போது காயிதே மில்லத்தின் அரசியல் கட்சியான ஒருங்கிணைந்த முஸ்லிம் லீக் கட்சி ,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்காக பிளவு கண்டது. ஜின்னா காயிதே மில்லத்திடம் இந்தியாவில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை எனில் முறையிடுங்கள் என ஆதரவுக் கரம் நீட்ட “எங்கள் நாட்டுக்குள் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்களே சரிசெய்து கொள்கிறோம் . ஒருபோதும் இன்னொரு நாட்டிடம் முறையிட மாட்டோம் என மிக உறுதியாக முழங்கினார். பாகிஸ்தான் முஸ்லிம் தேசமாக பிரிந்தாலும் இஸ்லாம் எங்கள் வழிபாடு இந்தியாதான் எங்கள் தாய்நாடு என உறுதியோடு விடைபெற்றார் காயிதே மில்லத்.

கேரளா மண்ணில் இரண்டு முறை எம்பி யான ” தமிழர்” 

காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவராக இருந்த போது 1962 தேர்தல் மற்றும் 1967 தேர்தலில் கேரள மாநிலம் மஞ்சேரி தொகுதியில் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டார். காயிதே மில்லத் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, குடிபெயர்ந்த ஊர் சென்னையில் உள்ள குரோம்பேட்டை. ஆனால் இவர் தேர்தலில் போட்டியிட்டதோ கேரள மாநிலம் மஞ்சேரியில் என்றால் நம்ப முடிகிறதா..?

இன்றை காலகட்டத்தில் இவை சாத்தியம். தகவல் தொழில் நுட்பம், போக்குவரத்து வசதிகள், தேர்தல் பிரச்சார கார்ப்பரேட் கம்பெனிகள் இருக்கும் காலத்தில் தேர்தல் வெற்றி பொருட்டே அல்ல. ஆனால் காயிதே மில்லத்தின் தேர்தல் வெற்றியை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது.

மஞ்சேரி தொகுதியில் போட்டியிட்ட பின் சமுதாய மற்றும் கட்சி பணிகள் அதிகம் இருந்ததால் தான் போட்டியிட்ட தொகுதி பக்கம் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட அவர் செல்லவில்லை. இருப்பினும் அவர் மீது மக்கள் கொண்ட அளப்பரிய அன்பினால் வெற்றியை காணிக்கையாக்கினர். ஒருமுறை மட்டுமல்ல தொடர்ந்து இரண்டுமுறை தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலே மஞ்சேரி தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.

“இன்பத் தமிழ் எங்கள் மொழி” என நாடாளுமன்றத்தில் கர்ஜித்த தமிழர்..!!

பழமையான மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என ஆட்சி மொழி குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் எழுந்த போது…

“ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். . இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது.

உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என பாராளுமன்றத்தில் கர்ஜித்தார் காயிதே மில்லத்.

வீடு தேடிச் சென்று ” அண்ணா” சந்தித்த மக்கள் தலைவர் ..

“காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் நடந்து கொண்டிருந்த போது ஆட்சி மாற்றத்திற்கு வேண்டி அண்ணாவும் , கலைஞரும் காயிதே மில்லத்தை அவரது குரோம்பேட்டை இல்லத்தில் சந்தித்தனர். காயிதே மில்லத் திமுகவிற்கு தனது ஆதரவை தருவதாக நம்பிக்கையளித்தார். அண்ணா மன நிறைவோடு சென்றார். மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். தமிழ்நாட்டின் தலைமகனானார்.

காயிதே மில்லத் பல அரசியல் தலைவர்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். காமராசர், பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் எம்ஜிஆர் ஆகியோரோடு நெருங்கி பழகினார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனது வீட்டிலிருந்து தனது கட்சி அலுவலகமான மண்ணடிக்கு செல்வதற்கு மின்சார ரயிலை பயன்படுத்தியவர் காயிதே மில்லத். அவரது எளிமைய போற்றாத அரசியல் தலைவர்கள் யாரும் இல்லை.

வழிகாட்டும் தலைவர் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டபின் அவரது உடல் புதுக் கல்லூரியில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அவரது உடல் மூன்று கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர். காயிதே மில்லத்தின் இறுதி ஊர்வலத்தில் எம்ஜிஆர் மூன்று கிலோ மீட்டர் நடந்தே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.