பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்திடம் தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய சர்ச்சை மீண்டும் தொடங்கியுள்ளது. சில மாநிலங்கள் இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியதே இதற்குக் காரணமாகும்.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை ஆராய தமிழ்நாடு அரசு சார்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த வல்லுநர் குழு, தனது பரிந்துரைகளை தமிழ்நாடு அரசிடம் வழங்கியது. இந்த பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடம் தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.
இதற்கு முன்பு சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், பட்ஜெட் தாக்கலின் போது, மாநில அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக அறிவித்தார். இது தவிர, நீதி மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் வகையில், ராஜீவ் காந்தி கிராமின் கிரிஷி பூமிலெஸ் மஸ்தூர் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் ஆண்டு முதல் ஆண்டு உதவித் தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆக உயர்த்தியும் முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








