அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
அதிமுக அவைத் தலைவரான மதுசூதனனுக்கு கடந்த ஜூலை மாதம் திடீரென மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை திடீரென மோசமானது,
இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டு வந்தார். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் உடல்நிலை நேற்று மீண்டும் கவலைக்கிடமானது. இந்நிலையில் அவர் இன்று காலமானார். அவர் மறைவுக்கு அதிமுக தலைவர்களும் பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதல், சமகாலத்திலும் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் அவைத் தலைவர் மதுசூதனன். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்த மதுசூதனன் “இதயக்கனி” எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை தொடங்கி அதன் தலை வராகவும் இருந்தார். அதிமுகவின் தீவிர விசுவாசியான மதுசூதனனுக்கு “அஞ்சா நெஞ்சன் ” என்ற பட்டத்தை வழங்கி எம்.ஜி.ஆர் பெருமை படுத்தினார்.
1991 ஆம் ஆண்டில் அதிமுக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய ஜெயலலிதா, வெற்றிபெற்ற மதுசூதனனுக்கு கைத்தறித்துறை அமைச்சர் பதவியை வழங்கினார்.
.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக சென்ற கட்சியின் மூத்த நிர்வாகி மதுசூதனன்தான். மதுசூதனன் தலைமையிலான அணிக்குதான் இரட்டை இலை சின்னம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.
2017 ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பாக வேட்பாளராகவும் மதுசூதனன் அறிவிக்கப்பட்டிருந்தார் ( பின்னர் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது ). எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கு பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மதுசூதனன் தோல்வியை தழுவினார். கட்சியின் மூத்த முன்னோடியான மதுசூதனன் சுமார் அரை நூற்றாண்டு காலம் அதிமுகவுடன் ரத்தமும் சதையுமாக இருந்தவர்.








