அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தல் நடத்தப்படும் விதம் குறித்து பல்வேறு விமர்சனங்களையும், கேள்விகளையும் ஓபிஎஸ் தரப்பினர் முன்வைக்கின்றனர். அதே நேரம் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு தங்கள் தரப்புக்கு முழு உரிமை உள்ளது என்று இபிஎஸ் தரப்பினர் பதிலடி கொடுக்கின்றனர். அதிமுக உட்கட்சி விவகாரம் மற்றொரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு விமர்சனங்கள்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுகவின் தலைமை தொடர்பான விவகாரம் அக்கட்சியில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திய பின்னர் வரும் பொதுச் செயலாளர் தேர்தலைக்கூட வாக்கெடுப்பு வரை நீளவிடாமல், இபிஎஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் சூழலை திட்டமிட்டே ஏற்படுத்துவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடந்த ஆண்டு ஜூலை 11ந்தேதி கூட்டிய பொதுக்குழுவில் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களின் அடிப்படையில் தற்போது பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக குறைந்தது 10 ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும். மேலும் கட்சியின் தலைமைக்கழக பொறுப்புகளில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் பதவி வகித்திருக்க வேண்டும். இத்தோடு நிபந்தனைகள் முடிந்துவிடவில்லை. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் கட்சியின் அமைப்பு ரீதியிலான 10 மாவட்டச் செயலாளர்களால், முன்மொழியவும், வழிமொழியவும்பட வேண்டும். ஒரு மாவட்டச் செயலாளர் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை முன்மொழியக்கூடாது.
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் 10 மாவட்டச் செயலாளர்களின் முன்மொழிதலையும், வழிமொழிதலையும் பெற வேண்டிய நிபந்தனை இருக்கும் சூழலில் நடத்தப்படும் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய 2 நாட்கள்தான் கால அவகாசம். அதுவும் தேர்தல் அறிவிப்பு இரவு வெளியான மறுநாள் காலையிலேயே வேட்பு மனு தாக்கலும் தொடங்கிவிடுகிறது என விமர்சிக்கின்றனர் ஓபிஎஸ் தரப்பினர். கடந்த ஆண்டு நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கு 7 நாட்கள் கால அவகாசம் இருந்ததும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.
இப்படிபட்ட சூழலில் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யார் அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியும்?. அவர்தானே அன்னபோஸ்டாக தேர்ந்தெடுக்கப்படுவார். கட்சியின் தலைமை குறித்து பெரும் சர்ச்சை எழுந்த பின் நடைபெறும் இந்த தேர்தல் வாக்குப்பதிவு வரை செல்லாவிட்டால் அதனை அடிப்படை தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலித்த தேர்தலாக எப்படி கருதமுடியும்?. இப்படி தேர்தலை நடத்துவது, பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க அடிப்படை உறுப்பினர்களுக்கு எம்.ஜி.ஆர் வழங்கிய உரிமையை பறிப்பதுபோல் ஆகாதா?
இப்படி ஒரு தேர்தலை நடத்திவிட்டு கட்சியின் அடிப்படை தொண்டர்களுக்கு எம்.ஜி.ஆர். அளித்த உரிமையை மீட்டெடுத்ததாக இபிஎஸ் தரப்பு எப்படி கூற முடியும்? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்புகின்றனர் ஓபிஎஸ் அணியினர்.
அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில்கூட அடிப்படை உறுப்பினர் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடலாம் என்கிற நிலைதான் இருந்தது. பின்னர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கட்சியின் தலைமை பதவியாக உருவாக்கப்பட்டபோதும் கட்சியில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினர்களாக இருந்தவர்கள் யார் வேண்டுமானாலும் அந்த பதவிகளுக்கு போட்டியிடலாம் என்கிற நிலை இருந்தது.
ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவில் கட்சி விதிகளில் இபிஎஸ் தரப்பு கொண்டுவந்த திருத்தம் மூலம், பொதுச் செலாளர் பதவிக்குரியவர்கள் ஒரு குறுகிய வட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் சாதாரண தொண்டன் நினைத்தால்கூட தலைமைப் பதவிக்கு வரமுடியும். அதற்கு நானே உதாரணம் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டங்களில் அடிக்கடி கூறுவதுண்டு. ஆனால் தற்போது நடத்தப்படும் பொதுச் செயலாளர் தேர்தலில் சாதாரண தொண்டன் போட்டியிட முடியுமா?.
ஜெயலலிதாவின் ஆசியோடு மூன்று முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வமே இந்த தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சாதாரண தொண்டன் இதில் போட்டியிடுவது குறித்து நினைத்துப் பார்க்க முடியுமா என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இபிஎஸ் தரப்பினர் முன்னின்று எதிர்கொண்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை இவ்வளவு அவசரமாக நடத்துவது ஏன் என்றும் ஓபிஎஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை சிறுபிள்ளைத்தனமாக இபிஎஸ் அணியினர் கையாள்வதாக ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகரும், அக்கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சிக்கிறார். உறுப்பினர் அட்டையைகூட புதுப்பிக்காமல் அவசரகதியில் பொதுச் செயலாளர் தேர்தலை இபிஎஸ் அணி நடத்துவதாகவும், இது சட்டப்படி செல்லாது எனவும் கொந்தளிக்கிறார் முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் மனுதாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: ஓபிஎஸ் தரப்பினர் குற்றச்சாட்டுக்கு இபிஎஸ் தரப்பினர் தரும் பதிலடி
அதிமுக அலுவலகம், வங்கிக் கணக்கு, பொதுக்குழு என எல்லாவற்றிலும் உரிமையை நிலைநாட்டிய தங்களுக்கு பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தவும் முழு உரிமை இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுகின்றனர்.
ஏற்கனவே அதிமுக சட்டமன்ற கட்சியில் 62 எம்.எல்.ஏக்களின் ஆதரவையும், பொதுக்குழு உள்ளிட்ட கட்சி அமைப்புகளில் அமோக ஆதரவைப் பெற்றுள்ள அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் இபிஎஸ் தற்போது தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஆகப் போவது காலத்தின் கட்டாயம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்சி பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தி தொண்டர்களிடையே தனக்கு இருக்கும் செல்வாக்கை இபிஎஸ் நிரூபித்துள்ளார் எனவும் அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
ஏற்கனவே பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட இருந்தபோது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் மூலம் அதனை நடைபெறாமல் தடுத்த ஓபிஎஸ் தரப்பு, தற்போதும் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கப் பார்க்கிறது என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பொதுச் செயலாளர் தேர்தல் அவசரஅவசரமாக நடத்தப்படுவதாக ஓபிஎஸ் தரப்பு கூறும் குற்றச்சாட்டை மறுக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டபோதுகூட சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள்தான் வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லுபடியாகும். எனவே அன்றைய பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்க்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து கேள்வி எழுப்ப உரிமை கிடையாது என்றும் இபிஎஸ் தரப்பினர் பதிலடி கொடுக்கின்றனர்.
முறைப்படி புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுதான் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது, இதில் எந்த விதிமீறலும் இல்லை எனவும் இபிஎஸ் ஆதரவாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
அதிமுகவில் எந்தவிதமான மாற்றங்களையும் கொண்டுவர கட்சியின் பொதுக்குழுவுக்கு கட்சியின் விதி எண் 43ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை சுட்டிக்காட்டும் இபிஎஸ் ஆதரவாளர்கள், கடந்த ஆண்டு ஜூலை 11ந்தேதி தங்கள் தரப்பால் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் மேற்கோள்காட்டுகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: சட்டரீதியிலான சிக்கல்கள்
1. கடந்த ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்ட விதம் செல்லும் என கடந்த மாதம் 23ந்தேதி உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பு தந்த உற்சாகத்தோடு பொதுச் செயலாளர் தேர்தலை இபிஎஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர். ஆனால் அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறிய சில அம்சங்களை இந்த நேரத்தில் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஜூலை 11ந்தேதி பொதுக்குழு கூட்டப்பட்ட விதம் செல்லும் எனக் கூறியிருந்தாலும் அந்த பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து தாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவிரும்பவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். மேலும் அந்த தீர்மானங்களை எதிர்த்து சட்டரீதியில் வழக்கு தொடர்வதற்கான வாய்ப்புகள் ஓபிஎஸ் தரப்பிற்கு திறந்தே இருப்பதாகவும் நீதிபதிகள் கூறினார். மேலும் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையை தங்களது தீர்ப்பு பாதிக்காது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
2. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையடுத்து, ஜூலை 11ந்தேதி பொதுக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
3. கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களின் அடிப்படையிலேயே தற்போது பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த திருத்தங்களுக்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ந்தேதி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கூட்டிய பொதுக்குவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள்தான் தற்போதுவரை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு இருக்கிறது. எனவே இன்னும் அங்கீகரிக்கப்படாத கட்சியின் சட்டவிதி திருத்தத்தின் அடிப்படையில் நடத்தப்படும் பொதுச் செயலாளர் தேர்தலின் முடிவை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
4.தற்போது இபிஎஸ் தரப்பினர் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அடுத்தடுத்து பின்னடைவுகள் ஏற்பட்ட சூழலிலும் கட்சியில் உரிமையை நிலைநாட்ட ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து போராடி வரும் நிலையில், நடத்தப்படும் பொதுச் செயலாளர் தேர்தல் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.