முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் எடுத்துவைக்கப்பட்ட முக்கிய வாதங்கள் என்ன?

ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பிற்கிடையே வாதங்கள் அனல் பறந்தன. இந்த வழக்கு,  தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூலை 11ந்தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர்  அதிமுக பொதுக்குழுவை கூட்டியவிதம் செல்லும் என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே நேரம் அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக எந்த மதிப்பீடையும் உச்சநீதிமன்றம் தெரிவிக்கவில்லை. இந்த பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சட்டரீதியில் வழக்கு தொடர அனைத்து வாய்ப்புகளும் ஓபிஎஸ் தரப்புக்கு திறந்தே இருப்பதாகவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர். இதையடுத்து ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஓபிஎஸ் அணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை இபிஎஸ் தரப்பு அறிவித்தது. இதனை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று நடைபெற்றது. ஓபிஎஸ் அணி சார்பில், ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகர், எம்.எல்.ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் 1.தங்களை கட்சியை விட்டு நீக்கியது சட்டவிரோதம், 2.மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கியது கட்சி விதிகளுக்கு முரணானது, 3. எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிடுவதற்கு யாருக்கு வாய்ப்பளிக்காத வகையில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதிகள் நிர்ணயம் என்கிற மூன்று பிரதான குற்றச்சாட்டுக்களை முன்னிறுத்தியே வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

 

ஓபிஎஸ் அணி தரப்பில் எடுத்துவைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்

குற்றச்சாட்டு 1.”தங்களை கட்சியை விட்டு நீக்கியது சட்டவிரோதம்”

ஓபிஎஸ் வாதங்கள்

1.கட்சியின் ஒருங்கிணைப்பாளரை நீக்கியது முழுமையாக தன்னிச்சையானது.

2. பொதுக்குழுவுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடையாது.

3. ஒருங்கிணைப்பாளரை நீக்கம் செய்ய கட்சியில் எந்த விதியும் இல்லை.

4. சாதாரண உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பின்பற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5. எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவியை பெறுவதற்காக முக்கிய பதவி வகித்தவரை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

6. ஜூலை 11 பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.

7. ஆனால் இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை.

மனோஜ் பாண்டியன் வாதங்கள்

1.எந்த காரணமும், எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்

2.கட்சியில் இருந்து நீக்கம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன.

3. அதிமுக அலுவலக கலவரத்தின் போது நான் சம்பவ இடத்துலேயே இல்லை. ஆனால் என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்

வைத்திலிங்கம் வாதங்கள்

1.எம்.எல்.ஏ, அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த என்னிடம் விளக்கம் கூட கேட்காமல் நீக்கியுள்ளனர்

ஜேசிடி பிரபாகர் வாதங்கள்

1.கட்சியில் இருந்து நீக்கும் முன் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை

2. கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக நோட்டீசும் அனுப்பப்படவில்லை, விளக்கமளிக்கவும் அவகாசம் வழங்கப்படவில்லை

குற்றச்சாட்டு 2-  ”மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கியது கட்சி விதிகளுக்கு முரணானது”

ஓபிஎஸ்  வாதங்கள்

1.ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது.

2. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைக்கும் முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ளது.

3. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய தீர்மானத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது

4. தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களால் நியமிக்கப்பட்டவர்கள்.

5.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க கோரும் தீர்மானம் ஜூன் 23 பொதுக்குழுவில் முன் வைக்கப்படாத நிலையில். அப்பதவிகள் காலாவதியாகி விட்டதாக எப்படி கூற முடியும்?

6. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை.

7. தகுதி நீக்கம் செய்து விட்டு பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

8. மக்களும், கட்சியினரும் விரும்புகின்றனர் என கூறி பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதாக கூறுகின்றனர். அதற்கு எந்த புள்ளிவிவரங்களும் இல்லை.

9.பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக கட்சியினரிடம் எந்த கருத்துகணிப்பு நடத்தவில்லை.

மனோஜ் பாண்டியன்  வாதங்கள்

1. ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்காததால் இன்றைய தேதி வரை இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி என்பது இல்லை

வைத்திலிங்கம்  வாதங்கள்

1.பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டன.

2.எந்த காரணத்துக்காகவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருக்க முடியாது

3. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக கூறினாலும்கூட, முதலில் இரு பதவிகளையும் நிரப்பிய பிறகே ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்க முடியும்

ஜேசிடி பிரபாகர்  வாதங்கள்

1.பொதுக் குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றி எட்டு மாதங்களுக்கு பின் நீதிமன்றத்தை அணுகியதாக இபிஎஸ் தரப்பு கூறுவது தவறு.

2. பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த 15 நாட்களில் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் தாமதம் ஏதுமில்லை

குற்றச்சாட்டு 3- ”பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள்”

 

ஓபிஎஸ்  வாதங்கள்

1. ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவித்த நிலையில் அந்த பதவியை மீண்டும் கொண்டு வந்த நிலையில், அப்பதவிக்கு போட்டியிட தகுதி நிபந்தனைகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளன.

2. பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவுகள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு விரோதமானது.

3. எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவியை பெறுவதற்காக,  முக்கிய பதவி வகித்தவரை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

4. என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டு நிபந்தனைகள் விதித்து பொது செயலாளர் தேர்தல் நடத்துவது போட்டியே இல்லாமல் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான்

5. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அதிகாரத்தை முற்றிலும் பறித்து விட்டனர்.

6.  பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார்

7. கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் வழக்கை திரும்பப் பெற தயார்

மனோஜ்பாண்டியன்  வாதங்கள்

1. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விதிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகள்படி மூன்று பேர் மட்டுமே அந்த தேர்தலில் போட்டியிட முடியும்.

2. இடைக்கால பொது செயலாளராக தன்னை தானே இ.பி.எஸ். அறிவித்துக் கொண்டார். தேர்தல் நடைபெறவில்லை.

வைத்திலிங்கம்  வாதங்கள்

1. ஒற்றை தலைமை வேண்டும் என பெரும்பான்மையினர் விரும்பினாலும் அது குறித்து ஒருங்கிணைபாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் முடிவெடுக்க முடியும்

ஜேசிடி பிரபாகர்  வாதங்கள்

1.தேர்தல் நடைமுறை துவங்கிய பின் நீதிமன்றம் தலையிட முடியாது என எதிர்தரப்பில் வாதிடப்படுகிறது. வழக்கு நிலுவையில் இருந்த போது தான் தேர்தல் நடைமுறை துவங்கப்பட்டது.

2. இயற்கை நீதி மீறப்பட்டால் தேர்த்ச்ல் நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியும்

ஓபிஎஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் தனது வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் மணிசங்கர், சலீம், ஸ்ரீராம் ஆகியோர் வாதாடினர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள்

 

ஓபிஎஸ் தரப்பினரின் மேற்கண்ட குற்றச்சாட்டுக்களுக்கும் வாதங்களுக்கு பதில் அளித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைத்த வாதங்கள் வருமாறு.

1.ஓ.பன்னீர்செல்வம் தனக்கு என தனி கட்சியை நடத்தி வருகிறார். அவர் எங்களை நீக்கியுள்ளார். நிர்வாகிகளை நியமித்திருக்கிறார்.

2. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும்.

3. பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

4. தாங்கள்தான் உண்மையான அதிமுக என ஓபிஎஸ் தரப்பினர் கருதினால்  பலத்தை நிரூபிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் பலத்தை நிரூபிக்க வேண்டும்.

5. ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த சகோதரரை எந்த நோட்டீசும் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

6. பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும்.

7. ஜூன் 23 பொதுக்குழுவில் நடந்த நிகழ்வுகள் காரணமாக ஜூலை 11 ல் பொதுக்குழு நடவடிக்கை எடுத்தது. பொதுக்குழு எல்லா காலத்திலும் கூட முடியாதென்பதால் பொதுச்செயலாளருக்கும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கும், தற்போது இடைக்கால பொதுச்செயலாளருக்கும் அவசர காலங்களில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கியுள்ளது.

8. திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றை தலைமை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

9. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதியாகவில்லை.

10.பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு இல்லை. பொதுக்குழுவில் ஆதரவு இல்லை என்பதால் தான் விதிகளை மீறியுள்ளார். கட்சி விதிகளை திருத்தவோ,நீக்கவோ,சேர்க்கவோ பொதுகுழுவிற்கு அதிகாரம் உள்ளது.

11. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கம் குறித்து நிகழ்ச்சி நிரல் இல்லை, யார் முன்மொழிந்தார், யார் வழிமொழிந்தார் என்பது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. அவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் தொலைக்காட்சி பார்த்திருக்க முடியாது/

12. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் பொதுக்குழு நடவடிக்கை எடுத்தது. அதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

13. இரட்டை தலைமையால் அரசியல் ரீதியாக முடிவெடுபதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் ஒற்றை தலைமையில் செயல்படலாம் என முடிவெடுக்கப்பட்டது. 2022ம் ஆண்டு ஜூலை 11ந்தேதி  பொதுக்குழு கூட்ட, 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

14. ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறைகூற முடியாது. கட்சியினரின் குரலாக பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது.

அதிமுக தரப்பில் எடுத்துரைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்

அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கீழ்க்கண்ட வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.

1. கட்சியில் பெரும்பான்மையானவர்கள் கூடி இனி இவை தான் விதிகள் என முடிவு செய்தால்,அது தான் விதிகள்.

2.    52 ஆண்டு கால அதிமுகவில் 47 ஆண்டுகள் பொதுச்செயலாளர் பதவி தான் இருந்துள்ளது. ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்தன.

3. மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வரப்பட்ட நிலையில், அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்ய கால அவகாசம் ஏற்படும் என்பதால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4. மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை

5. உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பாதை தெளிவாகியுள்ளது

6. கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன.

இப்படி பல்வேறு தரப்பில் வாதங்கள் எடுத்துவைக்கப்பட்ட நிலையில் காலை சுமார் 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இறுதியில் தீர்ப்பு தேதி குறிப்படாமல் வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா காலத்தில் மயானத்திற்கு சிபாரிசு என்ற நிலையை மாற்றியது திமுக அரசு – அமைச்சர் சாமிநாதன் பேச்சு

Web Editor

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்ஹா

Web Editor

ஜீப்பை அகற்றாமல் போடப்பட்ட சாலை: வேலூரில் ஸ்மார்ட்சிட்டி அட்ராசிட்டி!

Web Editor