“அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம்” – மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த விழிப்புணர்வு பிரசாரம்!

கரூரில் “அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார். கரூர் கோட்டைமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவ, மாணவிகளுக்கு…

கரூரில் “அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.

கரூர் கோட்டைமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா
கணேசன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் ஏப்ரல்
17ஆம்தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. அதன்படி கரூர் மாவட்டத்தின் 46 பள்ளிகளில் இவ்விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.

பேரணியில் மாவட்ட அளவில் தயார் செய்யப்பட்ட ஒரு வாகனம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான அரசின்
நலத்திட்டங்களான எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை, மன்ற செயல்பாடுகள், காலை உணவு, சத்தான சத்துணவுடன் வாரம் ஐந்து முட்டை வழங்குதல், அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக்கல்வி ஆகியவை வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோருக்கு
தெரியப்படுத்தும் வகையில் மேற்கு கொள்ளப்படுகிறது.

— சே.‌அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.