நாட்டின் பெரிய தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானியால் ராகுல் காந்தியை விலைக்கு வாங்க முடியாது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையிலும், மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றும் திரட்டும் வகையிலும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி “இந்திய ஒற்றுமை” நடைபயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, என பல்வேறு மாநிலங்கள் வழியாக 100 நாட்களை கடந்து தொடரும் “இந்திய ஒற்றுமை” பயணம் தலைநகர் டெல்லியை கடந்து தற்போது உத்தரபிரதேச மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.
டெல்லி-உத்தரபிரதேசம் இடையிலான லோனி நகரம் வழியாக உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்துக்குள் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். உத்தரபிரதேச எல்லைப் பகுதியில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்ததோடு, தேசிய மாநாட்டு தலைவர் பரூக் அப்துல்லாவும் யாத்திரையில் இணைந்தார்.
இந்த நடைபயணத்தில் லோனி பகுதியில் பிரியங்கா காந்தியும் இந்த யாத்திரையில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எனது சகோதரர் ராகுல் காந்தி ஒரு போராளி. நான் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். கௌதம் அதானி, முகேஷ் அம்பானி நாட்டின் பெரிய அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி இருக்கலாம். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும், ஊடகங்களையும் விலைக்கு வாங்கி இருக்கலாம்.
ஆனால் அவர்களால், என் சகோதரனை விலைக்கு வாங்க முடியவில்லை. ஒருபோதும் அவரை வாங்கவும் முடியாது. நான் அவரைப் பற்றியும், அவருடன் பயணித்து வரும் மற்ற அனைவரை பற்றியும் பெருமைப்படுகிறேன். அரவது நடைபயணத்தை இந்த அரசாங்கம் சிதைப்பதற்கான அனைத்து அழுத்தங்களையும் கொடுத்தது.அவரை குறிவைத்து விசாரணை அமைப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை என கூறினார்.







