நடிகர் விஜய்யின் பிறந்த நாளான இன்று நடிகை ஷாலினி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
உலக அளவில் பல்லாயிரக்கணக்கான திரை ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான செய்திகள், விஜய் பேசிய வசனங்களை வாட்ஸப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் போன்றவை வைரலாகி வருகின்றன.
அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும், கோலிவுட் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
விஜய் நடிக்கும் 67 வது படமான லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணியளவில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அவரது பிறந்தநாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு லியோ திரைப்படத்தின் முதல் பாடல் “நா ரெடி தான்” வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது.
இதனை தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகையும், நடிகர் அஜித்தின் மனைவியுமான ஷாலினி அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். நடிகர் விஜய் மற்றும் நடிகை ஷாலினி இருவரும் கண்ணுக்குள் நிலவு, காதலுக்கு மரியாதை ஆகிய இரு படங்களில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
காதலுக்கு மரியாதை திரைப்படம் இன்றளவும் விஜய்யின் திரைப்பயணங்களில் முக்கியமான திரைப்படமாக கருதப்படுகிறது.








