புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில், ’பச்சை என்கிற காத்து’ படத்தில் தேவதை என்ற பெயரில் நடித்தவர் மலையாள நடிகை சரண்யா சசி.
மலையாளத்தில் மோகன்லாலின், சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளத்தில் பல டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் அது புற்றுநோய் கட்டி என்று தெரியவந்தது. இதனால் பல்வேறு காலகட்டங்களில் அவருக்கு 11 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு மலையாள நடிகர், நடிகைகள் பொருளாதார உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த மே மாதம் 23 ஆம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் உடல் நிலை மோசமாகி இருப்பதாக, சரண்யா சசியின் தோழியும் மலையாள நடிகையுமான சீமா ஜி.நாயர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சரண்யாவின் உடல் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. தொண்டை வழியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கான செலவுகளை சமாளிக்க அவர் குடும்பத்தினர் போராடி வருகின்றனர். இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. சரண்யாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார்.