ஆவண எழுத்தர் பற்றாக்குறையை போக்க விரைவில் எழுத்து தேர்வு நடத்தி ஆவண எழுத்தர் உரிமங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
சென்னை நந்தனதில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை
அலுவலகத்தில் பத்திர பதிவு மற்றும் வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் பதிவு துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி, அரசின் வருவாயை பெருக்கும் வகையில் பத்திரப்பதிவுத்துறையில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பத்திரப்பதிவு துறையில் அரசுக்கு 4,213 கோடி வருவாய் வந்துள்ளதாகக் கூறிய அமைச்சர், இது கடந்த ஆண்டைவிட 2,100 கோடி ரூபாய் அதிகம் எனக் கூறினார்.
மேலும் பத்திரப்பதிவுதுறையில் இரண்டு புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக
அமைச்சர் கூறினார்.ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு விலை மதிப்பபீடு செய்ய (guide line value) ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், போலி பத்திரப் பதிவுகளை தடுக்க பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்ய வருபவர்களுக்கு இடை
தரகர்கள் துணை இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் பத்திரப்பதிவு நடைபெறுவதால்
அரசுக்கு வருவாய் உயர்ந்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆவண எழுத்தர்கள் பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்த அவர், ஆவண எழுத்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த, விரைவில் எழுத்து தேர்வு நடத்தி அதன்
மூலம் புதிதாக உரிமங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டது மூலமாக கடந்த மூன்று மாதங்களில் அரசுக்கு 170 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சியில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் நவீனமயக்கபடுள்ளது போல பத்திரப்பதிவு துறையும் திராவிட மாடல் என்ற சொல்லுக்கு ஏற்றார் போல செயல்பட்டு வருவதாக அத்துறையின் அமைச்சர் மூர்த்தி பெருமிதத்துடன் கூறினார். வணிகவரி துறையில் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட 7000 கோடி ரூபாய் கூடுதலாக வந்துள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.







