விமர்சனம்: எப்படி இருக்கிறது பீஸ்ட்?

பீஸ்ட் பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குநர் நெல்சனிடம் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு ”எனக்கு அரசியல் தெரியாது” என இயக்குநர் நெல்சன் பதில் அளித்தார். அது…

பீஸ்ட் பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குநர் நெல்சனிடம் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு ”எனக்கு அரசியல் தெரியாது” என இயக்குநர் நெல்சன் பதில் அளித்தார். அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது பீஸ்ட் படத்தை பார்த்த பின் உங்களுக்கு புரியும்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், விஜய் ஹீரோவாக நடிக்க, பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்னா தாஸ், சதீஷ் என ஒரு நடிகர் பட்டாளமே நடிக்க உருவான திரைப்படம் தான் பீஸ்ட். தமிழ்நாட்டில் உள்ள ஒரு வணிக வளாகம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, அதில் உள்ள மக்கள் வளாகத்தின் உள்ளேயே அவர்களிடம் சிக்கிக்கொள்கின்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கும் செல்வராகவன் தலைமையிலான பாதுகாப்பு அமைப்பு, வளாகத்தின் உள்ளே இருக்கும் raw agent ஆன விஜய்யின் உதவியுடன் எப்படி தீவிரவாதிகளை அழித்தொழிக்கப்பட்டு, அனைவரும் காப்பாற்றுகின்றனர் என்பதே பீஸ்டின் கதை.

படத்தின் ஆரம்ப காட்சியே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடங்குவதால், ஆரம்பமே இந்திய அரசியலை தொடும் விதமாகவே இருக்கிறது. ஏனெனில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் மோதலின் வரலாறு மிக நீண்டது. அங்கே உள்ள தீவிரவாத இயக்க தலைவரை பிடிக்கவே raw agent விஜய் அனுப்பப்படுகிறார். படத்தின் ஆரம்பத்தில், தன்னிடம் இந்தியில் பேசும் தீவிரவாதியிடம் “போய் தமிழ் கத்துகிட்டு வா” என்ற வசனம் கைத்தட்டல்களை பெறுகிறது. அதற்கு காரணம் தற்போது தமிழ்நாட்டில் ஹிந்தி திணிக்கப்படுவதாக எழும் எதிர்ப்பும் காரணமாக இருக்கலாம்.

ஆரம்பக் காட்சி தொடங்கி படம் முழுவதும் விஜய் எதிர்க்கும், அடிக்கும், கொல்லும் அனைத்தும் தீவிரவாதிகளும் இஸ்லாமியர்களாகவே காட்சிப் படுத்தியிருப்பது நெருடலை ஏற்படுத்தியுள்ளது. ட்ரெய்லர் வெளியானபோதே இந்த பிரச்னை எழுப்பப்பட்டு, குவைத், கத்தார் போன்ற இடங்களில் திரைப்படம் தடை செய்யப்பட்டது. தற்போது, படம் முழுவதும் தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், ஒவ்வொரு படத்திலும் தற்போதைய அரசியல் சூழலை ஏதேனும் ஒரு வகையில் சாடுவார் விஜய்’ என்று அவர் மீது ஒரு பிம்பம் இருக்கிறது. அது போலவே பீஸ்ட் படத்திலும் காட்சிகளும், வசனங்களும் இடம் பெறுகின்றன. அடுத்த பிரதமர் ஆவதற்காக, தீவிரவாதிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் மத்திய உள்துறை அமைச்சர், தீவிரவாதிகள் தலைவரை விஜய் பிடித்ததை தங்களின் தேர்தலுக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கும் மத்திய அரசு, “தேர்தலுக்காக தான நீங்க எல்லாத்தையும் பண்ணுவீங்க” என்று விஜய் பேசும் வசனம், என அனைத்தும் நடப்பு அரசியலை சீண்டும் வகையான காட்சிகளும், வசனங்களுமே ஆங்காங்கே இடம்பெறுகிறது.

க்ளைமேக்ஸில் ஆகாயத்தில் போராடும் விஜய்யை, ரஃபேல் விமானங்களே காப்பாற்றுகின்றன. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், ஒரு மிகப்பெரிய வணிக வளாகம் தீவிரவாதிகளால் hijack செய்யப்படுகிறது. ஆனால், மாநில அமைச்சர்களோ அரசியல்வாதிகளோ யாரும் ஒரு காட்சியில் கூட வருவதில்லை. ’வீரராகவன்’ விஜய் தொடர்பு கொள்வதெல்லாம், தமிழ் தெரிந்த செல்வராகவன் ஒருவரிடம் மட்டும் தான். hijack செய்தியை கேட்டு, மத்திய அமைச்சர் வடமாநிலத்தில் இருந்து பதறியடித்துகொண்டு தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

ஆனால், அதற்கு முன்னரே அவரது மனைவியும் மகளும் hijack செய்யப்பட்ட வணிக வளாகத்தில் சுற்றித்திரிவது எல்லாம் எந்தவித லாஜிக் என்று தெரியவில்லை. இப்படி படம் முழுவதும், பல லாஜிக் இல்லா காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. படத்தின் முதல் பாகம் சற்றே சுவாரஸ்யமாக சென்றாலும், இரண்டாம் பாகம் எப்போது முடியும் என்கிற சோர்வை கொண்டுவருகிறது. வழக்கமான விஜய் படங்களை போல ஹீரோவோடு கூடவே சுற்றுவது, பாடலுக்கு நடனமாடுவதைத் தவிர இந்த படத்திலும் ஹீரோயினுக்கு எந்த வேலையும் இல்லை.

படத்தின் சில இடங்களில் அவ்வபோது வரும் டைமிங் காமெடி வசனங்கள் சிரிப்பை வர வைத்தாலும், இரண்டாம் பாதியில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ள காமெடி காட்சிகள் சலிப்பையே ஏற்படுத்துகிறது. raw agent வீரராகவனான விஜய், ஒற்றை ஆளாக பாகிஸ்தானுக்குள் சுகோய் jet தாக்குதலில் ஈடுபடுவது நமக்கு அபிநந்தனை ஞாபகப்படுத்துகிறது. ஆனால், அபிநந்தன் நிலை வீரராகவனுக்கு ஏற்படுவது இல்லை.

சொல்லப்போனால், தீவிரவாதிகளின் நூறு ak-47 புல்லட்டுகளுக்கு நடுவே ஒற்றை கத்தியை வைத்தே அவர்கள் அனைவரையும் அழிக்கிறார் raw agent விஜய். ஒளிப்பதிவு நிச்சயம் பாராட்டத்தக்கது. இசையும் ஆங்காங்கே விஜய்க்கான பில்டப்பை ஏற்றுகிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதிக்கான படத்தொகுப்பு, சுவாரஸ்யத்தை குறைக்கிறது. விஜய் போன்ற பெரிய ஹீரோ இடம் பெறும்போது, எதிரே நிற்கும் வில்லன் வலுவான கதாபாத்திரமாக இருக்க வேண்டும். ஆனால், பீஸ்ட் படத்தில், கதை, திரைக்கதை போல, படத்தின் வில்லனும் வலுவிழந்தவராகவே இருக்கிறார்.

ஹீரோவையும், ஆக்ஷனையும், காமெடியையும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் நெல்சன் போன்ற இயக்குநர்கள், கதைக்கும் கதாப்பாத்திரங்களும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. அதேபோல, இந்தியா பாகிஸ்தான் போன்ற அரசியல் சார்ந்த பிரச்னைகளில் கைவைக்கும்போது அதுகுறித்த முழு அரசியல் புரிதலும் இருத்தல் வேண்டும்.

– பிரபாகரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.