அவங்களே பதில உருவாக்கும்போது ஏன் பேட்டி கொடுக்கணும்?-விஜய்

நடிகர் விஜய் கடந்த 10 ஆண்டுகளாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்தே வந்தார். இந்த காலகட்டத்தில் அவருடைய ஸ்டார் வேல்யூ அசுர வேகத்தில் வளர்ந்தது. தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம்வந்த சூப்பர் ஸ்டார்…

நடிகர் விஜய் கடந்த 10 ஆண்டுகளாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்தே வந்தார். இந்த காலகட்டத்தில் அவருடைய ஸ்டார் வேல்யூ அசுர வேகத்தில் வளர்ந்தது. தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம்வந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களை விட விஜய் படங்களுக்கான ஓப்பனிங் மிக பிரமாண்டமாக மாறியது. விஜய் பேட்டிகள் கிடைக்காததால், விஜயுடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எனத் தொடங்கி விஜய் போல் மேக்கப் போட்ட டூப்பு விஜய்கள், விஜயை நேரில் பார்த்தவர்கள் ,அவருடன் போட்டோ எடுத்தவர்கள், அவருடன் காரில் சென்றவர்கள், சைக்கிளில் அவரை பின் தொடர்ந்தவர்கள், விஜயை நினைத்து கனவு கண்டவர்கள் என அனைவரையும் அழைத்து ‘சொல்லுங்க சொல்லுங்க… தளபதிகூட செட்டுல என்ன பண்ணீங்க..? அவருக்கு சிரிப்பு வந்தா சிரிப்பாரா இல்ல கோவப்படுவாரா..! கோவம் வந்தா சிரிப்பாரா இல்ல எல்லாரு மாதிரியும் கோவம் தான் படுவாரா?’ போன்ற கேள்விகளால் வந்தவர்களை ‘வேற மாறி’ செய்து அனுப்பினர். இது தொடர்பான பல்வேறு மீம்ஸ்-களும் இணையத்தில் பகிரப்பட்டன.ஒரு நாள் விஜயே பேட்டி கொடுக்க வந்தாலும், ‘ சொல்லுங்க விஜய், தளபதி விஜய் கூட வொர்க் பண்ண எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துச்சு’ன்னு கேட்டு அவரை அலறவிடப்போகிறார்கள் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது.

இன்னொரு புறம், விஜய் தளபதி ஆன கதை, விஜய் சைக்கிள் ஓட்டிய கதை, விஜய் வாக்கிங் போன கதை என்று செய்திச்சேனல்களிலும் பல சாகசங்கள் நடத்தப்பட்டன.( ‘அது கண்ணாடி பாஸ்’, எனும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எங்களும் கேட்கிறது!)

இந்நிலையில், இத்தனையாண்டு இடைவெளிக்கு பிறகு பீஸ்ட் படத்தை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் கொடுத்த பேட்டி இணையம் முழுக்க பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த பேட்டியின் ப்ரோமோவின்போதே விஜயிடம் நெல்சன் எந்த கேள்வியெல்லாம் கேட்கக்கூடும் என்று நாம் ‘கட்டுரை’ வெளியிட்டிருந்தோம். அதில் நாம் குறிப்பிட்டிருந்த பல்வேறு கேள்விகள் மற்றும் அது தொடர்பான விளக்கங்களும் இப்பேட்டியில் வெளிப்பட்டது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது ( “அப்படின்னு யாரு சொன்னா..?”, “வேற யாரும் இல்ல, நாங்களே தான் சொல்லிக்கிறோம்!”)..

“பீஸ்ட் படத்துல வேலை செஞ்ச அனுபவம் எப்படி இருக்கு, படம் எப்படி வந்திருக்கு, நல்லாருக்கா” என்ற கேள்வியை முன் வைக்க, “ யாருக்கு தெரியும் வந்தாதான தெரியும்” என கூறி thug life செய்தார் விஜய். “ சார் எதுனா நல்ல வார்த்தை நாலு விதமா சொல்லுங்க” என கிண்டலாக கேட்க, ‘என்னோட படத்த பத்தி நானே என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல, கண்டிப்பா நல்லா வரணும்னு நினச்சிதான் ஒரு படம் பண்றோம், சிலது க்ளிக் ஆகுது, சிலது க்ளிக் ஆகுறதில்ல! மத்தபடி எல்லா படத்துக்கும் அதே உழைப்புதான போடுறோம். நிறைய பேர் படம் எப்படி இருக்குனு கேப்பாங்க, தெரிலபா நீயே பாத்துட்டு சொல்லிடுன்னு சொல்வேன். நாம எதுனா சொல்லப்போய் படம் பாத்துட்டு, இதத்தான் நல்லாருக்குன்னு சொன்னியான்னு கேட்டுட்டா..?’ எனக்கூறி சிரித்தவர் ‘அதுனாலதான், நீங்களே பாத்துட்டு சொல்லுங்கனு சொல்லிட்டு அமைதியாயிடுவேன்’ எனக் கூறிக்கொண்டே வாயில் ‘zip’ போடுவது போல் ‘கியூட்’ ஆக செய்துகாட்டினார்.( சுறா படத்தின் நினைவலைகள் கூட வந்திருக்கும்போல). மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட இதே பதிலைத்தான் விஜய் கூறினார் என்பதும், அது பாக்ஸ் ஆபீஸில் மெகா ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து, “ ஜார்ஜியாவுல ஷூட் பண்றப்போ, ப்ரேக் டைம்ல எங்களை விட்டு சர்ச்சுக்கு போனீங்களே, கடவுள் நம்பிக்கை இருக்கா.. இல்லையா?” என்ற கேள்வியை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த விஜய், “ எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு, சர்ச்சுக்கெல்லாம் போவேன், பிள்ளையார் பட்டி விநாயகர் கோயில், திருநள்ளாறு கோயிலுக்கெல்லாம் போய் சாமி கும்பிடுவேன் அதுமட்டுமில்லாமல் கத்தி பட ஷூட்டிங் அப்போ கடப்பால இருக்க ‘அமீன் பீர் தர்கா’-க்கு போயிருக்கேன், எங்க போனாலும் அதே தெய்வீக உணர்வுதான் கிடைக்கும்.. எங்க அம்மா இந்து, அப்பா கிறிஸ்தவர், இருவரும் காதலிச்சி கல்யாணம் பண்ணிகிட்டாங்க, இந்த சாமியத்தான் கும்பிடணும்னு என்ன எப்பவும் அவங்க கட்டுபடுத்துனது இல்ல. அப்படி தான் நான் என் பசங்களையும் வளக்குறேன். அதேமாதிரி தான் ஜார்ஜியாவுல அந்த சர்ச்சுக்கு போய் கடவுளுக்கு ஒரு வணக்கத்த போட்டுட்டு வந்தேன்னு” ரொம்பவே சுவீட்-ஆக பேசினார். விஜயின் பெயரை ‘ஜோசப் விஜய்’ என்று அரிய வகை ஆராய்ச்சியை செய்து கண்டுபிடித்து சொன்னவர்களுக்கான பதிலடியாகவே இந்த பதில் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

மேலும். “அப்பாவ பத்தி என்ன நினைக்குறீங்க” எனம் கேள்வியை தயக்கத்துடன் 100 முழத்துக்கு சுத்தி சுத்தி கேட்க, “அப்பாதான் ஒரு குடும்பத்தோட வேர், என்னோட அப்பான்னு இல்ல பொதுவாவே சொல்றேன், அப்பாவுக்கும் கடவுளுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் கடவுள நாம பாக்க முடியாது, அப்பாவ பாக்கலாம்” என பதிலளித்தார். விஜய்க்கும் அவரின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையில் மாபெரும் அரசியல் போரே நடந்து முடிந்த நிலையில் விஜயின் இந்த பேச்சு பலராலும் ரசிக்கப்படுகிறது. இருவருன் மன வருத்தங்களுக்கு இடையிலும் நமது நியூஸ் 7 தமிழின் ‘Man vs mike’ நிகழ்ச்சியில் பேசும் போது, ‘ஆயிரம் இருந்தாலும் அவர் என் ரத்தம்’ என்ற தொனியில் பேசி பாசத்தில் 8 அடி பாய்ந்திருந்தார் சந்திரசேகர். இப்போது அவரையே கடவுளாக்கி 16 அடி பாய்ந்திருக்கிறார் விஜய்.

இதனைத்தொடர்ந்து, “விஜயை விஜயே ஒரு கேள்வி கேக்கனும்னா என்ன கேப்பீங்க” என இன்னொரு கேள்வியை போட்டார் நெல்சன்.

இதற்கு பதிலளித்த விஜய், “ஹாய் விஜய், இத்தன வருஷத்துல தமிழ் சினிமா உங்கள ஒரு நல்ல இடத்துல கொண்டுவந்து வச்சிருக்கு, இந்த தமிழ் சினிமாவ அடுத்த உயரத்துக்கு கொண்டு போற மாதிரி எப்போ படம் பண்ண போறீங்க” என்ற கேள்வியை கேட்பேன் என்று பதிலளித்தார். உடனே. ‘எப்போ சார் அப்படி ஒரு படம் பண்ண போறீங்க’ என்று நெல்சன் கேட்க, ‘அடுத்த கேள்விக்கு போலாமா’ என்று லாவகமாக தாவினார் விஜய். நிற்க, தனியார் யூ-டியூப் சேனலில் பேசும்போது, “ நம்ம நினைக்குற மாதிரி படம் பண்ணனும்னு நினைச்சாலும் ஹீரோ விடமாட்டாங்க’ என்று நெல்சன் பேசியதற்கும், விஜயின் இந்த கேள்விக்கான பதிலுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக நீங்கள் நினைப்பதற்கெல்லம் கம்பெனி பொறுப்பாகாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இதுமட்டுமல்லாமல், “10 வருடங்களாக நீங்கள் ஏன் பேட்டியே கொடுப்பதில்லை” என்ற கேள்வியை முன் வைத்தார் நெல்சன்

உடனே சரித்திரத்தை கொஞ்சம் திரும்பி பார்த்த விஜய், “11 வருஷம் முன்னாடி ஒரு பேட்டி கொடுக்குறப்போ, நான் எதோ சொல்லப்போயி அவங்க அதை ஒரு மாதிரி புரிஞ்சிட்டு எழுத, அத தப்பா கன்வே ஆகிடிச்சு. நான் பேட்டி கொடுக்குறத நிறுத்துனத்துக்கு அதுவும் ஒரு காரணமா அமைஞ்சிருச்சி’ன்னு சொல்லி முடித்தார். ‘மாப்ள சொம்பு கொடுத்தாதான் தாலி கட்டுவார்’ என்கிற வடிவேல் காமெடியில் காட்சி போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது என்று பலராலும் புரிந்துகொள்ளப்பட்டது.

உடனே அந்த பழைய பேட்டியை நெட்டிசன்கள் தோண்டியெடுக்க தொடங்கினர். 2013 ஆம் ஆண்டில், விஜயே தன் ட்விட்டர் பக்கத்தில், “What is the point in giving an interview when they make up their own answers ..!!(அவங்களே இஷ்டத்துக்கும் பதில உருவாக்கும்போது நாம பேட்டி கொடுக்குறதுல என்ன பயன்?) என்று குறிப்பிட்டு தன்னுடைய பேட்டியின் ஒரு பகுதியை சிவப்பு நிற பெட்டிகளால ஹைலைட் செய்து பதிவிட்டிருந்தார்.

அதில், “ இப்போ நிறைய ஹீரோக்கள் இருக்கலாம். என் ரசிகர்கள் பலரேகூட, அந்த ஹீரோக்கள் படத்தையும் ரசிக்கலாம். ஆனா, அந்த ஹீரோக்கள் படத்தை பார்க்கிற எல்லாருக்கும் என் படம் புடிக்கும். அது விஜய் மேஜிக்!” என்றும், “என் மார்கெட் வேல்யூ உச்சத்தில் இருக்கப்பவும் சரி, மத்த நேரங்கள்லயும் சரி.. எப்பவும் நான் ஸ்டார் இயக்குநர்களின் ஃபேவரைட்டா இருந்தது இல்லை. இப்பக்கூட யாரும் என் கால்ஷீட்டுக்காக காத்திருக்குறது இல்லை. இந்த ஸ்டார் வேல்யூ பத்தி நான் கவலைப்படுறது இல்லை” என்றும் அதிலிருந்தது. இதில், செம்பு வேண்டும் என்று விஜயே கேட்டாரா அல்லது அப்படி புரிந்துகொள்ள பட்டதா என்பதெல்லாம் ஆய்வுக்குட்பட்டது.

தொடர்ந்து, “ 4 கார் இருக்கப்போ ஏன் சைக்கில்லை போனீங்க” என்கிற கேள்விக்கு பதிலளித்தவர், “வீட்டுக்கு பின்னாடிதான் ஓட்டிங் பூத் இருந்தது. வெளிய வரும்போது பையனோட சைக்கிள் இருந்துச்சி, அப்படியே ஜாலியா ஒரு ரவுண்டு போலாமேன்னு எடுத்துட்டு போனா அதுக்கு நீங்க ஒன்னு பண்ணீங்க பாரு?, இதுக்கு பின்னாடி இப்படிலாம் அர்த்தம் இருக்கான்னு நானே ஷாக்காயிட்டேன்” என்று சொல்லி சிரித்தார். விஜயின் சைக்கிள் பயணத்தை, சே குவேராவின் ‘the motorcycle diaries’ போல ஒரு புரட்சிகர பயணமாக மாற்றி, போற்றி பாடிய விஜய் முற்போக்கு ரசிகர்கள்(இவர்கள் பற்றி பின்னர் விளக்கப்படும்) அனைவரும் அரை நாள் அரசு விடுமுறை வாங்கிக்கொண்டு ஆரவல்லி மலைத்தொடரில் பதுங்கியுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

இதன் பிறகுதான் உலகமே எதிர்நோக்கும் மற்றொரு கேள்வியை அம்பாக தொடுத்தார் நெல்சன். “இளைய தளபதி, தளபதியா மாறுன மாதிரி.. தளபதி.. தலைவனா மாறுவாரா, அதுக்கான விருப்பம் இருக்கா?” என்பதே அந்த கேள்வி

“என்ன தளபதியா ஆக்குனது ரசிகர்கள்தான். அந்த தளபதிய தலைவனா ஆக்கி பாக்கணும்னா அதையும் அவங்கதான் பண்ணனும்னு” என்று சொல்லிக்கொண்டிருக்க, “அதான் எங்க தளபதியா தலைவனா மாத்திடோமே” என்ற உடன் பிறப்புக்களின் மைன்ட் வாய்ஸ் நமக்கு சத்தமாக கேட்க தொடங்கியது. மேலும் பேசிய விஜய், “எனக்கு விஜயா இருக்குறது தான் புடிச்சிருக்கு, ஆனா ரசிகர்களுடன் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்படி அமைகிறது அதுக்கேத்த மாறிதான முடிவுகள எடுக்க முடியும். மாறனும்ணா மாறித்தான ஆகுனும் என்று பதிலளத்தார். சந்தர்ப்ப சூழ்நிலைகள், ரசிகர்களை விட, ‘ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வாய்ப்பேயில்லை என ஜாதகம் பார்த்து சொன்ன அதே ஜோதிடரை அழைத்து விஜயும் தலைவராக வாய்ப்பில்லை என்று கூறவைத்துவிட்டால் மிக சுலபமாக அவர் தலைவர் ஆகிவிடுவார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

மேலும் விஜய் ரசிகர்களில், வெறித்தனமான விஜய் ரசிகர்கள், குடும்ப விஜய் ரசிகர்கள்,  விஜய் முற்போக்கு ரசிகர்கள் என்று பல பிரிவினர்கள் உள்ளனர். இவற்றில் வெறித்தனமான விஜய் ரசிகர்கள் பலரும் அவரின் அரசியல் வருகையை வரவேற்கவே செய்கின்றனர். இன்னொரு புறம், பெரும்பாலான குடும்ப ரசிகர்களோ, ‘படம் வந்தா மட்டும் சொல்லுங்க ஃபேமிலியோடு வந்து ஜாலியா பாக்குறோம்’என்கிற மைண்ட் செட்டிலேயே இருக்கின்றனர். ஆனால் விஜய் முற்போக்கு ரசிகர்கள் பலரோ, விஜயின் அரசியல் எண்ட்ரி தொடர்பாக செய்திகள் வந்தாலே, ‘அம்பி அந்நியனாக மாறி தன் காதலி என்றும் பாராமல் நந்தினியை தீயில் தூக்கி போட முயற்சிப்பது போல, விஜய்-ஐ சம்பவம் செய்ய தவறுவதில்லை. இத்தனைக்கும் மத்தியில் தளபதியாக ட்ராவல் செய்வதே இமாலயப் பணியாக இருக்கும் போது, எப்படி தலைவராக போகிறார் என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.