நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயிலை அபகரிக்க முயற்சி நடப்பதாக உதவி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயிலை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும் கோயிலுக்கு சம்பந்தமில்லாத தனி நபர் சிவராத்திரிக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் பரமக்குடி உதவி ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காட்டு பரமக்குடி எனும் ஊரில் உள்ள அருள்மிகு திரு வேட்டை உடைய அய்யனார் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயிலாகும்.
இந்தக் கோயிலின் பரம்பரை நிர்வாக டிரஸ்டியாக பாக்யராஜ் உட்பட 3 பேர் உள்ளனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் அனைத்து குலதெய்வ குடிமக்களும், பக்தர்களும் ஒற்றுமையாக சேர்ந்து மாசி மகா சிவராத்திரி விழா நடத்துவது வழக்கம்.

இதனையும் படியுங்கள்: கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிக் சூடு – தமிழ்நாட்டு மீனவர் உயிரிழப்பு
ஆனால் இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இந்த கோயிலில் சாமியை இதுவரை குலதெய்வமாக வணங்காத நபரான தங்கமணி என்பவர் இந்த முறை சிவராத்திரி ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். மேலும் கோயில் நிர்வாக டிரஸ்டியா்களை கோயிலுக்குள் விடாமல் கோயிலை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் பரமக்குடி உதவி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்குள் வந்தால் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், எனவே தங்கமணி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள தங்களுக்கு அனுமதி அளிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோயில் நிர்வாகிகள் இன்று பரமக்குடிய உதவி ஆட்சியர் அப்தாப் ரசூலிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
– யாழன்







