தனது கருத்துக்களை ட்விட்டர் பதிவிட்டு அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிவரும் நடிகர் சித்தார்த், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை எதிர்த்து ஆபாசமான கருத்தை பதிவிட்டதால் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
இந்த ஆண்டு பஞ்சாப் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், பாஜகவின் பேரணியை தொடக்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு கடந்த ஜன.5ம் தேதி பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் வான் வழியாக அவர் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் திடீரென சாலை மார்க்கமாகப் பயணிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பிரதமர் பயணிக்கும் சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நாட்டு பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது. இது குறித்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கருத்தையும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், “ஒரு நாட்டு பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பான நாடாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்” என அவர் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது கருத்துக்களை ட்விட்டர் பதிவிட்டு அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிவரும் நடிகர் சித்தார்த், தற்போது சாய்னா நேவாலின் இந்த பதிவிற்கு, ஆபாசமான வார்த்தைகளால் பதில் கருத்து பதிவிட்டதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சித்தார்தின் இந்த பதிவைக் கண்டு கடுப்பான ட்விட்டர் பயனாளர்கள், ‘பத்மபூஷன் விருதும், பல ஒலிம்பிக் பதக்கங்களையும் குவித்து வைத்திருக்கிறார் சாய்னா, நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்?; பிரதமரின் பாதுகாப்பு சீர்குலைந்தது சரி என்று நினைக்கிறீர்களா? இவர் ஒரு தலைபட்சமாகவே எப்போதும் கருத்துக்களை பதிவிடுவார்; ஆணாதிக்க சிந்தனைவுடையவர்’ என தங்களது கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சித்தார்த் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
"COCK & BULL"
That's the reference. Reading otherwise is unfair and leading!
Nothing disrespectful was intended, said or insinuated. Period. 🙏🏽
— Siddharth (@Actor_Siddharth) January 10, 2022
தனது இந்த பதிவால் கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பதை அறிந்து, தான் கூறிய வார்த்தை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது எனவும், அவரின் மரியாதையை சீர்குலைக்கும் எண்ணத்தில் அந்த கருத்தைப் பதிவிடவில்லை எனவும் சித்தார்த் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.