தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ராம் சரணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், பிரபல நடிகர் சீரஞ்சீவியின் மகனுமான நடிகர் ராம்சரண் 2007ம் ஆண்டு வெளியான ”சிறுத்தா” எனும் திரைப்படம் மூலம் தெலுங்கு திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கினார். நல்ல வசூலை பெற்ற இந்த படத்தினை தொடர்ந்து 2009ல் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் “மகதீரா” எனும் படத்தில் நடித்தார்.
இப்படம் தமிழில் மாவீரன் எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. இப்படம் நடிகர் ராம் சரணின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. நடிகர் ராம் சரண் நேரடி தமிழ் படங்களில் நடிக்கவிட்டாலும் மாவீரன் படத்திற்கு பின் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமான நடிகராக மாறினார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஆர் ஆர் ஆர்” திரைப்படம் உலகளவில் பெரும் வெற்றி பெற்றதோடு 2 ஆஸ்கர்களையும் தட்டி சென்றது.
தற்போது இவர் பிரம்மாண்ட தமிழ் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ”கேம் சேஞ்சர்” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அரசியல் கதைகளமாக உருவாகும் இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
நடிகர் ராம்சரணுக்கு உபாசனா காமினேனிக்கும் 2012 ம் ஆண்டு திருமணமானது. உபாசனா காமினேனி அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனரும் செயல் தலைவருமான பிரதாப் சி. ரெட்டியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராம்சரண் மற்றும் உபாசனா காமினேனி தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை ஹைதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







