கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (46). குறுகிய காலத்திலேயே தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் இவர். கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, திடீரென்று இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உடல் பெங்களூரு கண்டீரவா ஸ்டூடியோவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவர் மறைவு கன்னட சினிமா மட்டுமல்லாமல், இந்திய திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். தமிழ் நடிகர்களான சூர்யா, சிவகார்த்தியேன் ஆகியோர் அவர் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், இரங்கல் தெரிவித்துள் ளார். ஹூட் செயலியில் பேசி பதிவிட்டுள்ள அவர் அதில் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் வணக்கம். எனக்கு சிகிச்சை முடிஞ்சு நல்லா குணமாகிட்டு வர்றேன். நான் ஹாஸ்பிடல்ல இருக்கும்போது புனித் ராஜ்குமார் அகால மரணமடைஞ்சிருக்காங்க. அந்த விஷயத்தை எனக்கு இரண்டு நாள் கழிச்சுதான் சொன்னாங்க. அதைக் கேட்டு நான் ரொம்ப ரொம்ப வேதனைப்பட்டேன். மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த குழந்தை. திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை. பேரும் புகழும் உச்சியில இருக்கும்போது, இவ்வளவு சின்ன வயசுலயே நம்மளை விட்டு மறைஞ்சிருக்காங்க. அவருடைய இழப்பு, கன்னட சினிமாவில் ஈடுகட்டவே முடியாது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. புனித் ராஜ்குமார் ஆத்மா சாந்தியடையட்டும். நன்றி. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.








