தேனி கொண்டு செல்லப்பட்ட நடிகர் மாரிமுத்துவின் உடல் : உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி..!

சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் உடல், அவரது சொந்த ஊரான தேனியில் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. தேனி மாவட்டத்தின் பசுமலை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் மாரிமுத்து, 1990-களில் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக…

சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் உடல், அவரது சொந்த ஊரான தேனியில் இன்று தகனம் செய்யப்படவுள்ளது.

தேனி மாவட்டத்தின் பசுமலை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் மாரிமுத்து, 1990-களில் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக இணைந்து அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய டங்களில் பணிபுரிந்தார். தொடர்ந்து, கவிஞர் வைரமுத்துவிடம் பணியாற்றிய அவர், மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட இயக்குநர்களிடமும் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களையும் அவர் இயக்கி உள்ளார். பரியேறும் பெருமாள், வாலி, ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மாரிமுத்து, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில், நடித்து வந்தார். சென்னையில் வசித்து வந்த அவர், நேற்று காலை சீரியல் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் மாரிமுத்துவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகினர், சின்னத்திரை நடிகர்கள் அனைவரும் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திரையுலகினர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, நடிகர் மாரிமுத்துவின் உடல், தேனி மாவட்டம் பசுமலை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.