குடியரசுத்தலைவர், முதலமைச்சர், நீதிபதிகள், அரசு அதிகாரிகள் என அனைவரும் ஒரு கட்டத்திற்கு மேல் அதிகாரம் அற்றவர்கள், ஆனால் எழுத்தாளர்கள் என்றுமே அதிகாரம் மிக்கவர்கள் என எழுத்தாளர் பவா செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மானுட அறம் எனும் தலைப்பில் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எழுத்தாளர் பவா செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசுகையில், ”அறம் என்றால் தர்மம். பவா செல்லத்துரை நாம் அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய முக்கியமான ஆளுமை. வாசிப்பை நோக்கி நம்மை திருப்பும் ஆற்றல் எழுத்தாளர் பவா செல்லத்துரைக்கு
உள்ளது. அறம் என்பது விரிந்து பரந்தது. அப்பேற்பட்ட அறம் சார்ந்த வாழ்க்கையை நாம் வாழ வேண்டும்.” என பேசினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய எழுத்தாளர் பவா செல்லத்துரை, “குடியரசுத்தலைவர், முதலமைச்சர், நீதிபதிகள், அரசு அதிகாரிகள் என அனைவரும் ஒரு கட்டத்திற்கு மேல் அதிகாரம் அற்றவர்களாக மாறி விடுகிறார்கள். ஆனால் எழுத்தாளர்கள் என்றுமே அதிகாரம் உள்ளவர்கள். அனைவருக்கும் ஒரு அறம் உள்ளது. திருடன், வழக்கறிஞர், நீதிபதி என எல்லோருக்குமே தனித்தனி அறம் உண்டு.
மனித வாழ்க்கை சமமானது இல்லை. பல முடிச்சுகள் கொண்டது. அதை எழுத்தாளன் தன் படைப்புகள் மூலமே அவிழ்த்துக்கொண்டே இருக்கிறான். சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான முன்னெடுப்புகளை மனிதர்கள் எடுக்க வேண்டும்” இவ்வாறு பேசினார்.







