நடிகர் மனோபாலாவின் கடைசி தருணங்களை, யூடியூப் பக்கத்தில் அவரது மகன் ஹரிஷ் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத் தன்மையும் திறமையும் கொண்டவர் மனோபாலா. தனது சீரிய நடிப்பால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்காத கலைஞன். 69 வயதான நடிகர் மனோபாலா கடந்த சில நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வழக்கம்போல படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். இதற்கிடையில் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். அவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மனோபாலாவின் மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்ததோடு, நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நடிகர் மனோபாலாவின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குஅவரது குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர்; 24 படங்களை இயக்கியவர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞரான மனோபாலாவின் கடைசி தருணங்களை, அவரது மகனான ஹரிஷ் மனோபாலா தந்தையின் Manobala’s Waste Paper யூடியூப் சேனல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தந்தைக்கு விருப்பமான பாடல் ஒன்றை மனமுருக பாடி, அவரை மகிழ்வித்துள்ளார். இந்த வீடியோ பதிவிடப்பட்ட 16 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளர்களை தொட உள்ளது. தற்போது இந்த நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளதோடு, கலகலப்பாக பேசிக்கொண்டே இருந்த மனிதரின் பேசமுடியாத நிலை பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது.
- பி.ஜேம்ஸ் லிசா









