நடிகர் ஜீவாவிற்கு இன்று பிறந்தநாள்; திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து

திரைத்துறையில் தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த நடிப்பால், ரசிகர்கள் மனதில் தொடர்ந்து நிலைத்திருக்கும் நடிகர் ஜீவா, இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  …

திரைத்துறையில் தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த நடிப்பால், ரசிகர்கள் மனதில் தொடர்ந்து நிலைத்திருக்கும் நடிகர் ஜீவா, இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

வித்தியாசமான நடிப்பாலும், பக்கத்து வீட்டு பையனை போன்ற தோற்றத்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் ஜீவா. 2003-ல் வெளியான ஆசை ஆசையாய் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பிரபல தயாரிப்பாளர் ஆர்.பிசவுத்ரியின் மகன் என்பதால் சினிமாவில் நடிக்க, முதல் வாய்ப்பு எளிதில் கிடைத்தது. ஆனால் ரசிகர்கள் அவரை ஒரு நடிகனாக ஏற்றுக்கொள்ளவும், சினிமாவில் தொடர்ந்து நிலைத்திருக்கவும் காரணமாக அமைந்தது அவரது நடிப்பு மட்டும் தான். கதைக்கு கதை வித்தியாசம், நகைச்சுவை உணர்வு, சாக்லேட் பாய் போன்ற தோற்றம் என தன்னால் முடிந்த அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக செய்து வருகிறார் .

இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2005-ல் வெளியான ராம் திரைப்படம் ஜீவாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியது. மனநலம் பாதிக்கப்பட்டவராக ஜீவா நடித்த கதாப்பாத்திரம் பலரின் பாராட்டை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் பெற்றுத்தந்தது. 2006 Cyprus சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. அங்கு சிறந்த நடிகருக்கான விருது ஜீவாவிற்கும் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது யுவன் சங்கர் ராஜாவுக்கும் வழங்கப்பட்டது. மேலும் இத்திரைப்படத்தில் ஜீவா மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோரது நடிப்பு பாராட்டப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 2007-ல் ராம் இயக்கத்தில் வெளியான “கற்றது தமிழ்” திரைப்படம் ஜீவாவின் சினிமா பயணத்தில் மீண்டும் ஒரு சிறந்த படமாக அமைந்தது. வசூல் ரிதியாக வரவேற்பை பெற தவறிவிட்டாலும் விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டையும் பெற்றது. குறிப்பாக நா.முத்துகுமார் வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பறவையே எங்கு இருக்கிறாய் பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொளித்தது.

சிவா மனசுல சக்தி, சிங்கம் புலி, நண்பன் போன்ற படங்களில் நகைச்சுவையில் கலக்கினார் ஜீவா. நகைச்சுவை ஒரு புறம், ஆக்ஷன் மற்றொரு புறம் என நடித்த ஜீவா காதல் நாயகனாக மாறியது நீதானே என் பொன்வசந்தம் படத்தில் தான். 2012ல் கௌதம் மேனன் இயக்கிய இந்த படம், ஜீவாவிற்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. நடிகராக மட்டுமின்றி மற்றபிற விஷயங்களிலும் ஜீவா ஆர்வம் காட்டிவந்தார். கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட ஜீவா, சிசிஎல் என்ற நடிகர்கள் கிரிக்கெட் போட்டியிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து காட்டினார். அவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்து தான், 83 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

 

நடிகர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்ட ஜீவா, தொடர்ந்து சினிமாவில் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என  அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அவரை நாமும் வாழ்த்துவோம்..

– தினேஷ் உதய்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.