தமிழ்நாட்டில் மற்ற மொழி திரைப்படங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன என தயாரிப்பாளர் அருண்பாண்டியன் வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகர் கருணாஸ் நடித்துள்ள ஆதார் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய தயாரிப்பாளர் அருண்பாண்டியன், தமிழ் திரையுலகின் பொற்காலம் இப்போது இல்லை. நாங்கள் நடித்த காலம் தான் உண்மையான பொற்காலம் என்று குறிப்பிட்டார்.
தற்போது மற்ற மொழி திரைப்படங்கள் தான் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிட்ட அருண் பாண்டியன், விஜய், அஜித் போன்ற உச்சநட்சத்திரங்கள் பெரும் தொகையை ஊதியமாக பெற்றுகொள்வதால் தமிழ் திரைப்படங்களின் தரம் குறைவதாக வேதனை தெரிவித்தார்.
இயக்குனர் அமீர் பேசுகையில், ஒருநாளும் தமிழ் சினிமா பின்னோக்கி செல்லாது. ஒரு ஆர்ஆர்ஆர் அல்லது ஒரு கேஜிஎஃப்பை வைத்து பின்னோக்கி செல்வதாக நினைக்க வேண்டாம். எல்லா காலகட்டத்திலும் ஹீரோக்கள் பின்னால் செல்வது இருந்தது. இங்கிருந்து நிறைய கலைஞர்கள் மற்ற மொழிகளில் பணியாற்றியுள்ளனர்.ஒரு படத்தை வைத்து தமிழ் சினிமாவை எடை போட வேண்டாம் என்று குறிப்பிட்டார்.








