இந்து சமய அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்மலை மீதுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிவுற்று இன்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , வணிகவரி மற்றும் பத்திர பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திருக்கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 3884 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தான் பக்தர்களுக்கு வசதிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
மேலும், பழமையான கோயில்களில் நூறு கோடி ரூபாய் ஒதுக்கி திமுக அரசு திருப்பணிகளைச் செய்து வருகின்றது. திருக்கோயிலுக்கு நிலுவையிலிருந்த 260 கோடி வாடகை பாக்கியை வசூலித்துள்ளோம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வீரவசந்தராயர் மீண்டப பணிகள் எவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிக்கப்படுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவாகச் செய்து முடிக்கப்படும் என கூறினார்.
அத்துடன், ஆலயங்களில் செல்போன் பயன்பாடு தடை குறித்து நீதிமன்ற உத்தரவை பொறுத்த வரையில், ஏற்கனவே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இந்த நடைமுறை அமலில் உள்ளது. இதேபோல தமிழகத்திலுள்ள 48 முதுநிலை ஆலயங்களில் செயல்படுத்தப்பட்டு முதலில் திருச்செந்தூரில் அமல்படுத்தப்படும் என பேசினார்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் அய்யர்மலை, சோழிங்கர் உள்ளிட்ட இடங்களில் மலைக்கோயில்களில் ரோப்கார் சேவையை ஏனோ தானோ என செய்தனர். திமுக பொறுப்பேற்று முறையாக நிதி ஒதுக்கப்பட்டு மலைக்கோயில்களில் வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றது. திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், கண்ணகி கோவிலில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
அத்துடன், சில மலைக்கோவில்களில் பாதை அமைப்பது தொடர்பாக வனத்துறையுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். போலி சான்றிதழ் மூலம் அறநிலையத்துறையில் பணியில் சேர்ந்தவர்கள் குறித்த கேள்விக்கு, வாய் புளித்ததோ மாங்காய் புளித்தோ என கூறாமல் தகுந்த ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் நாங்களே விசாரித்து உண்மை என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
மேலும், மீட்கப்பட்ட சிலைகள் தங்களுக்குச் சொந்தமானது என கோயில் நிர்வாகம் தகுந்த ஆதாரம் மற்றும் சான்றிதழுடன் அணுகினால் அவர்களிடமே ஒப்படைக்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்று வெளிநாடுகளிலிருந்து 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 82 சிலைகள் மீட்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திருடுபோன 166 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூரினார்.