ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள், சொந்த ஊர் செல்லும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்து 888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், சென்னையில் மட்டும் 10 ஆயிரத்து 518 சிறப்புப் பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, கோயம்பேடு, பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளியை முன்னிட்டு 91 ஆயிரம் பேர் சிறப்புப் பேருந்துகள் மூலம் சொந்த ஊர் புறப்பட்டுச் சென்றதாகவும், நடப்பாண்டில் சிறப்பு முன்பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆம்னி பேருந்துகளில் இணையதளம் மூலமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டறிந்தால், கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சென்னையில் இருந்து பயணிப்பவர்கள், தங்கள் பகுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல கூடிய பேருந்து நிலையங்களை எளிதில் அடைய கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சென்னையில் 5 பேருந்து நிலையங்கள் இயக்கப்படுகின்றன என்பதை அவ்வபோது அறிவுறுத்தி வருகிறோம், அந்தந்த பேருந்து நிறுத்தங்களுக்கு செல்வதற்காக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சிறப்பு பேருந்துகள் பற்றாக்குறை இல்லாத வகையில் இன்று 750 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது. தேவைபட்டால் கூடுதலாக இந்த பேருந்துகளும் பயன்படுத்தப்படும். மேலும் பயணிகள் பட்டாசுகளை எடுத்து செல்ல கூடாது என அறிவுறுத்த பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் சிவசங்கர், அவ்வாறு எடுத்து செல்வது தெரிந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.








