மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து பெற நடவடிக்கை – அமைச்சர் பதில்

அரசு அலுவலகங்களுக்குத் தேவையான பொருட்களை மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரத்யேக இணையதள முகப்பு உருவாக்கம் பணி நடைபெற்று வருவதாகவும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.  …

அரசு அலுவலகங்களுக்குத் தேவையான பொருட்களை மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரத்யேக இணையதள முகப்பு உருவாக்கம் பணி நடைபெற்று வருவதாகவும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை இணையவழி மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து மாநில மகளிர் விற்பனை சங்கம் தங்கள் இணையதளத்தில் பதிவேற்றுவதற்கு முன்னணி வர்த்தக நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாக கூறினார்.

 

மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் 69 பொருட்கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், மாவட்டம் வாரியாக இணையதளங்கள் உருவாக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருவதாகவும் அரசு அலுவலகங்களுக்கு தேவையான பொருட்களை, மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் இருந்து வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பிரத்யேக இணையதள முகப்பு உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரித்தார்.

 

திமுக அரசு மகளிருக்கான முன்னேற்றம், வளர்ச்சியை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களில் 116 பொருட்கள் அமேசான், ப்ளிப்கார்ட், ஜெம் இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை மின்னணு வணிகத்தை பயன்படுத்தி விற்பனை செய்யும் முறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

 

எப்போதெல்லாம் திமுக அரசு பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வளர்ச்சி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,
அரசு அலுவலகங்கள் பயன்பாட்டுக்கான பொருட்களை சுய உதவிக்குழுக்கள் மூலம் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது, அதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.