தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக வழங்க கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கேட்டுக் கொண்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்தார். அப்போது, கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி நீரினை தமிழ் நாட்டிற்கு அளித்திட, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகள் வழங்கக் கோரி, 19.07.2023 அன்று எழுதிய முதலமைச்சர் மு.கஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததாவது: “முதல் அமைச்சரின் கடிதத்தை மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்திடம் வழங்கினேன். அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மாதம் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர், தற்போது வரை வழங்கப்படவில்லை. மேகதாது அணையை ஒருபோதும் கட்ட அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்தார்.







