“மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயலாற்ற வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கல்விக்கூடங்களில் அடுத்தடுத்து நிகழும் பெண் குழந்தைகளின் மர்ம மரணங்கள் குறித்த கொடுஞ்செய்திகள் பெரும் பதைபதைப்பையும், மனவலியையும் தருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பெரும் இடைவெளியைக் களையவும், பாடச்சுமைகளால் மாணவப் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைக்கவும், பள்ளிச்சூழலில் மாணவப்பிள்ளைகளுக்கான முழுப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் அரசு விரைந்து செயலாற்ற வேண்டுமெனக் கோருகிறேன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலும் உளவியல் மருத்துவர்களை ஆசிரியராக நியமித்து, சிறப்பு ஆலோசனை வகுப்புகளை நடத்தி மாணவச் செல்வங்களின் மனநலனை செம்மைப்படுத்தவும், இனியொரு உயிர் போகாவண்ணம் தடுக்க அவர்களது பாதுகாப்பையும், உளவியல் நலனையும் உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் மற்றொரு பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.