ஒரு பெண்ணின் முன்னேற்றம் என்பது 100 ஆண்களின் முன்னேற்றத்திற்கு சமம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான கல்வியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், மாணவிகளை கையாள்வது கண்ணாடி குவளையை போன்றது. அழுத்தி பிடித்தாலும், லேசாக பிடித்தாலும் உடைந்து விடும். எனவே மாணவிகளை அந்த அளவு மென்மையாக, கவனமாக கையாள வேண்டும்.
ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் வாழ்க்கையில் மிகவும் அதிகமான சவால்களை எதிர்கொள்கின்றனர். பெண் குழந்தைகள் படிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என் பார்க்க வேண்டும்.
ஆண்களைவிட பெண்கள் சாதிப்பது மிகவும் சவாலானது என்று குறிப்பிட்டார். ஒரு பெண்ணின் முன்னேற்றம் என்பது 100 ஆண்களின் முன்னேற்றத்திற்கு சமம் என்று தெரிவித்தார்.
மேலும், இவ்வளவு தடைகள் இருந்தும் நாட்டில் பெண்கள் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகின்றனர். விஞ்ஞானிகள், அமைச்சர்கள் என எல்லாத் துறைகளிலும் பெண்கள் தொடர்ந்து சாதனை புரிந்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் நன்மையும் , தீமைகளும் இருக்கின்றன எனவே மாணவிகள் அதை கவனமாக கையாள வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.








