உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் ஆவணங்களுடன் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் குவிந்தனர்.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்ட `ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்துக்கு தமிழ்நாடு முழுவதிலும் 20-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. இந்நிறுவனம் தங்களிடம் ‘ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 36,000 ரூபாய் வரை வட்டி வழங்கப்படும்’ என்ற விளம்பரத்தை வெளியிட்டது. அதை நம்பி மக்கள் பலரும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பின்னர் இவ்விளம்பரத்தின் உண்மைத்தன்மை குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவுதுறை ஆருத்ராவுக்குச் சொந்தமான 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தியது.
இதனிடையே, ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களில் நூற்றுக்கும் மேலானோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றாக திரண்டு, தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு கூறினர். பின்னர் போலீசார் அவர்களை கலைத்ததோடு, வருவாய் துறை அதிகாரியை அனுகவேண்டும் என அறிவுறுத்தினர். பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் ஆருத்ரா நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் உரிய ஆவணங்களோடு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.
இதையடுத்து, சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதலீட்டாளர்கள் குவிந்தனர். இதனால் அவர்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று டோக்கன் முறையில் முதலீட்டாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களுடன் வரும் நபர்களிடம் டோக்கன் மற்றும் முகக்வசம் அணிந்தவர்களை சோதித்த பின்னர் போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.
முதலீட்டாளர்கள் பண முதலீடு செய்யப்பட்டதற்கான அசல் ஆவணம்,முதலீடு செய்தவர்களின் ஆதார் அட்டை நகல், முதலீடு செய்தவர்களின் வங்கி கணக்கு புத்தகம் நகல் உள்ளிட்ட ஆவணங்களை வருவாய்த்துறை அலுவலர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 மணிக்கு தொடங்கிய நிலையில், காலை 8 மணி முதலே ஏராளமான முதலீட்டாளர்கள் குவிந்ததால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
– இரா.நம்பிராஜன்








