ஒசூர் அரசுப்பள்ளி வகுப்பறையில் கட்டிடத்தின் சீலிங் காங்கிரிட் பெயர்ந்து விழுந்ததில் 1ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 9வது வார்டிற்குட்பட்ட பாரதியார் நகரில் மாநகராட்சி துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பில் 33 மாணவ
-மாணவிகள் பயின்று வரும் நிலையில் நேற்று மாலை வகுப்பு ஆசிரியை உமா ராணி
என்பவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது, வகுப்பறையின் மேற்புற சீலிங் காங்கிரிட் 2 அடி அகலத்திற்கு பெயர்ந்து
விழுந்ததில் முன்வரிசையில் அமர்ந்திருந்த சர்தார் ஷெரிப் (6), நிக்கில் (6), சாய்
விஷ்வாந்த் (6) ஆகிய மூன்று மாணவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு
இரத்தம் வெளியேறியதால், உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். இதில் சாய் விஷ்வாந்த் என்கிற மாணவனுக்கு தலையில் 5 தையல்கள் போடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளியில் வகுப்பறையின் சீலிங் காங்கிரிட் பெயர்ந்து விழுந்து 3 மாணவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த தகவல் அறிந்து பள்ளியை ஆய்வு மேற்கொண்ட துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் அப்பகுதி மன்ற உறுப்பினர்கள் குழந்தைகள் வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்து தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தனர்.







