மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த அரசு பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு ஆண்கள், ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் காயம் அடைந்த 41 பேர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாதி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சரக டிஐஜி அபினவ் குமார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்து மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக, இக்கோர விபத்தில் காயமடைந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.




