20 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவு-நாடு திரும்பியபோது பிடிபட்ட நபர்

20 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த தஞ்சாவூரை சோ்ந்த திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவா், துபாயிலிருந்து விமானத்தில் வந்தபோது, சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (43). இவர் கடந்த 20…

20 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த தஞ்சாவூரை சோ்ந்த திருட்டு
வழக்குகளில் சம்பந்தப்பட்டவா், துபாயிலிருந்து விமானத்தில் வந்தபோது, சென்னை
விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (43). இவர் கடந்த 20
ஆண்டுகளுக்கு முன்பாக, தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு
திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இதை அடுத்து இவரை கைது செய்ய
தஞ்சாவூர், புதுக்கோட்டை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் இவர் போலீசிடம்
சிக்காமல் தப்பியோடி, வெளிநாடு சென்று தலைமறைவாகிவிட்டார்.

இதை அடுத்து தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ரவிக்குமாரை தேடப்படும்
தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா். அதோடு அனைத்து சர்வதேச விமான
நிலையங்களுக்கும், எல்ஓசி போட்டு வைத்திருந்தார்.

இதற்கிடையே தனது 23 வயதில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய ரவிக்குமார், அதன்
பின்பு வெளிநாடுகளில் 20 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்துக்
கொண்டிருந்தாா். 20 ஆண்டுகளாக இந்தியாவுக்கு வராமல், வெளி நாடுகளிலேயே,
தொடர்ந்து தங்கி இருந்தார்.

இந்த நிலையில் 20 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இனிமேல் போலீசாா் தேட மாட்டார்கள்
என்று கருதி, தன்னுடைய 43 வது வயதில் இந்தியா திரும்ப முடிவு செய்தாா்.
அதன்படி துபாயில் இருந்து நேற்று காலை, சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள்
விமானத்தில் ரவிக்குமார் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில், குடியுரிமை அதிகாரிகள் அனைத்து பயணிகளின்
பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது
ரவிக்குமாரின் பாஸ்போா்ட்டை ஆய்வு செய்தபோது, 20 ஆண்டுகளாக தஞ்சாவூர்
போலீசாரால், திருட்டு வழக்குகளில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய
வந்தது.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், ரவிக்குமாரை வெளியே விடாமல், ஓர் அறையில்
அடைத்து வைத்தனா். அதோடு தஞ்சாவூர் மாவட்ட போலீஸுக்கு தகவல் கொடுத்தனா்.
அங்கிருந்து தனிப்படை போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு வந்து,
ரவிக்குமாரை கைது செய்து, பலத்த பாதுகாப்புடன் தஞ்சாவூர் கொண்டு சென்றனர்.

20 ஆண்டுகளாக ஐக்கிய அரபு நாடுகளில் தலைமறைவாக இருந்த, திருட்டு குற்றவாளி,
சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.