70வது பிறந்த தினத்தில் தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த விஜயகாந்த்!

70வது பிறந்த தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சந்தித்தார். இதனால், தொண்டர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். விஜயகாந்த் பிறந்த தினத்தையொட்டி அவரை பார்ப்பதற்காக…

70வது பிறந்த தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சந்தித்தார். இதனால், தொண்டர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

விஜயகாந்த் பிறந்த தினத்தையொட்டி அவரை பார்ப்பதற்காக தமிழகமெங்கும் இருந்து தேமுதிகவினர் சென்னைக்கு வருகை தந்தனர்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார் விஜயகாந்த். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். அவருடன் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன் சண்முக பாண்டியன் உள்ளிட்டோரும் இருந்தனர். வெள்ளை சட்டை பேண்ட் கறுப்பு கண்ணாடி அணிந்து நாற்காலியில் அமர்ந்தவாறு தொண்டர்களைப் பார்த்து விஜயகாந்த் கையசைத்தார்.

அவரது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பெற்று – துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “எளியோரை அரவணைக்கும் வள்ளல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு தமிழ்நாடு பாஜக  சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இன்று பிறந்தநாள் காணும் ஆருயிர் நண்பரும், உடன்பிறவா சகோதரரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண ஆரோக்கியத்துடன் வாழ்வில் அனைத்து வளமும், நலமும் பெற்று, மென்மேலும் பல வெற்றிகள் கண்டு மகிழ்வுடன் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என்றார் நடிகர் சரத்குமார்.

மத்திய இணை அமைசச்ர் எல்.முருகன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், சிறந்த நடிகராக, தேமுதிக தலைவராக, மக்கள் மனதில் இடம் பெற்றுள்ள விஜயகாந்த்,  இறைவனின் அருளால் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ அவரின் பிறந்த நாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகர் கார்த்தி சந்தித்து வாழ்த்து

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சங்கத்தின் பொருளாளர் நடிகர் கார்த்தி விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பிறந்தநாள் தினத்தில் விஜயகாந்தை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டார். நடிகர் சங்கம் சார்பாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன் என்றார் நடிகர் கார்த்தி.

அவரது பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும் பல்வேறு மாவட்டங்களில் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.