ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிகர்கள் பங்கேற்பது தவறு – சீமான்

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிகர்கள் பங்கேற்பது தவறு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர்…

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிகர்கள் பங்கேற்பது தவறு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர்
கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சீமான் உள்ளிட்ட 14 பேரை விடுதலை செய்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஓய்விற்குப் பிறகு அவர்களுக்கு பல்வேறு சலுகைகள்
அளிக்கப்படுகிறதே? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த சீமான்,
இந்தியாவில் நீதிபதிகள் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு தொடர் வண்டிகளில் சலுகை வழங்குவதால் 1,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார்.

நாட்டின் கடன் தொகை 100 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. சலுகை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்கக்கூடாது. உயர்ந்த இடத்தில் உள்ள நீதிபதிகள் குறித்து எதிர்மறையான கருத்துக்களை பதிவிடக்கூடாது. அது சிக்கலை ஏற்படுத்தும்.
இலவசங்களால் நாடு ஒருபோதும் வளர்ச்சி அடையாது.

கடந்த கால பட்ஜெட்களில் சலுகை, மானியம், போனஸ், இலவசம் இவற்றால் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதுபோன்ற அறிவிப்புகள் வாக்கை கவர்வதற்கான வெற்று கவர்ச்சி திட்டங்கள். இதனால் பயன் ஏதும் ஏற்பட்டுள்ளதா? என எதிர் வினா எழுப்பிய சீமான், கலைஞர் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட தொலைக்காட்சிகளில் தான் நாம் படம் பார்க்கிறோமா?. கல்வி என்பது மானுட உரிமை அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. கல்வியையே கடன் வாங்கி படிக்கும் நிலைமையில் தான் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிப் பயிலும் மாணவர்களை ஒரு சைக்கிள் வாங்க கூட வாங்க முடியாத நிலையை உருவாக்கி வைத்துள்ளீர்கள்.

வேளாண் விவசாய பெருமக்கள் இறுதி வாழ்க்கை வரை கடனிலேயே வாழும் நிலையை உருவாக்கிவிட்டீர்கள். இலவசங்களுக்கு செலவிடப்படும் தொகையினை எவ்வாறு ஈடுகட்டுகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது. இலவசங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் பாஜக ஏன் வேளாண் மக்களுக்கு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய் வழங்குகிறது?. கேரளாவிலும், டெல்லியிலும் தனியாருக்கு நிகராக அரசு பள்ளி கட்டிடங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படும் நிலையில் உள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகள் அமைச்சர்களால் நடத்தப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இளைஞர். தற்போது தான் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
போகப் போகத்தான் அவரின் திறமை வெளிப்படும். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் உரிய தொகை கொடுத்து படத்தை வாங்குகிறார்கள். முறையான
கணக்கு காட்டுகிறார்கள்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ஹிமாலய வெற்றி பெற்றதற்கு ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டதும் ஒரு முக்கிய காரணமாக நான் கருதுகிறேன். ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து மக்கள் கருத்து கேட்பதற்கு முன்பாக முதலமைச்சர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த வேண்டும். நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பர படத்தில் நடித்துள்ளது தவறுதான். டாஸ்மாக் கடையை மூடுவது மற்றும் எட்டு வழி சாலை அமைப்பது தொடர்பான முதலமைச்சரின் கருத்தை முதலில் தெரிவிக்க வேண்டும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.