தமிழகத்தில் ஆவின் பால் விலைக் குறைப்பிற்கு பின்னர் அதன் விற்பனை 24 லட்சம் லிட்டரில் இருந்து 26 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தபடி, ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் பால் விலைக் குறைப்புக்குப் பின் கடந்த மே 23-ம் தேதி சென்னையில் 15 லட்சத்து 40 ஆயிரம் லிட்டரும், மே 22-ம் தேதி பிற மாவட்டங்களில் 12 லட்சத்து 59 ஆயிரம் லிட்டரும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தினசரி பால் விற்பனை சுமார் 24 லட்சம் லிட்டராக இருந்தது, விலைக் குறைப்புக்கு பின்னர் ஆவின் பால் விற்பனை சுமார் 26 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
அதேபோல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் பால் கொள்முதல் அளவும் அதிகரித்துள்ளது. சில தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதலை நிறுத்திவைத்துள்ளது. இதன்காரணமாக ஆவின் நிறுவனத்துக்கு தினசரி பால் கொள்முதல் 36 லட்சம் லிட்டரில் இருந்து 40 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.







