திருவாரூர் அருகே விழாவில் விருந்து சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது ஐந்து மாத
கர்ப்பிணி மனைவிக்கு விருந்து கொடுக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த விருந்து சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 20-க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 15 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், வேளுக்குடி பகுதியைச் சேர்ந்த செல்வமுருகன் என்கிற இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை செல்வமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 5 நபர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழாவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







