வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு, முன்னாள் படைவீரர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காத்திடவும், நாடு திரும்பும் தமிழர்களின் வாழ்வாதரத்திற்கு துணை நிற்கவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை எனும் புதிய துறையை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வழிகாட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்திய முதலமைச்சர், முகாமில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டவும், அடிப்படை வசதிகளை முறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், புதிதாக முன்னாள் படைவீரர் நல அலுவலகங்களை தோற்றுவிக்க ஆய்வுகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.







