மும்பையில் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் நடத்த இருப்பதாக பாகிஸ்தானில் இருந்து வந்த தகவலை அடுத்து அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தொலைபேசி எண்ணில் இருந்து மும்பை போக்குவரத்துக் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு நேற்றிரவு ஒரு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி வந்ததாகவும், அதில், கடந்த 2008ல் நிகழ்ந்ததுபோன்ற தீவிரவாதத் தாக்குதலை மும்பையில் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த தாக்குதலை 6 பேர் நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை அடுத்து மும்பை காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்ட்ர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், இந்த குறுஞ்செய்தியை தாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், இந்த தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மற்ற விவரங்களை மும்பை மாநகர காவல் ஆணையர் தெரிவிப்பார் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மும்பை மாநகர காவல் ஆணையர் விவேக் பன்சால்கர், மும்பை போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தீவிரவாத அமைப்பு, நமது நாட்டில் செயல்படக்கூடிய ஓர் அமைப்பு என தெரிவித்தார்.
இதையடுத்து அந்த தொலைபேசி எண் குறித்து குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அந்த எண் பாகிஸ்தானில் இருந்து முடக்கப்பட்டதாக விவேக் பன்சால்கர் தெரிவித்தார். எனினும், இது குறித்த விசாரணையை குற்றப் பிரிவு போலீசார் தொடங்கி இருப்பதாகவும், இது குறித்த வழக்கு மும்பை போரிவலி காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அனைத்து விவரங்களும் மகாராஷ்டிரா அதிரடிப் படைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த அச்சுறுத்தல் குறித்து முழுயைாக விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்த விவேக் பன்சால்கர், மும்பை கடற்பகுதியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மும்பை கடல் எல்லை முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 8 இடங்களில் தொடர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நிகழ்த்தினர். இதில், 160க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லஷ்கர் இ தய்பா தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.









