காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஐஜி. டிஐஜி, எஸ்பிகளுக்கு, மாற்று பதவிகள் வழங்காமல், மாதக் கணக்கில் இழுத்தடிப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய ஏ.ஜி.பாபு உடல் நலக்குறைவு காரணமாக நீண்ட விடுமுறையில் சென்றதால், சென்னை மாநகர கிழக்கு மண்டல இணை கமிஷ்னராக பணியாற்றிய பிரபாகரனுக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கி திருப்பூர் கமிஷனராக நியமித்தனர். வேலூர் சரக டிஜஜியாக பணியாற்றி வந்த, ஆனி விஜயா திடீரென மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் நடந்த, கலவரம் தொடர்பாக மாவட்ட எஸ்.பியாக பணியாற்றிய செல்வகுமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பிரபாகரன் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷ்னராக, நியமிக்கப்பட்டதால் சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. 
எஸ்.பியாக பணியாற்றிய விஜயகுமார், ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் மாற்றப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு மாற்று பணியிடம் வழங்கவும், மண்டல பெண் ஐஜி பணியிடமாற்றம் உள்ளிட்ட 13 காவல்துறை அதிகாரிகள் பணியிடைமாற்றம் தொடர்பான பைல்கள், கடந்த 15 நாட்களுக்கு முன்பு தயார் செய்யப்பட்டு முதல்வரின் அனுமதிக்காக உள்துறை செயலாளர் மூலம் அனுப்பிவைக்ககப்பட்டது. 
முதல்வரும், இந்தக் கோப்பில் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் நிலையில் இந்த பட்டியல் வெளியாகவில்லை. காரணம், டிஜிபி அலுவலக உயரதிகாரி ஒருவரின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்ததால், அதை தடுத்து நிறுத்துவதற்காக பட்டியல் வெளியிடப்படவில்லை என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.

மன உளைச்சலில் காவல் அதிகாரிகள்
சென்னை மாநகரில் முக்கிய பதவியாக கருதப்படும், கிழக்கு மண்டல இணை கமிஷ்னர் மற்றும் வேலூர் சரக டிஐஜி பதவிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளன. மாதக்கணக்கில், ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பது, அதிகாரிகளை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளுக்கு மாற்று பணியிடம் 10 முதல் 15 நாட்களில் வழங்கப்பட்டுவிடும். ஆனால் தற்போது மாதக்கணக்கில், பணி நியமணம் வழங்காமல் தாமதமாவதற்கு காரணம் பதவி நியமனத்தில் உள்ள தலையீடுதான் என்கின்றனர் அதிகாரிகள். இது அதிகாரிகளின் பணியை பாதிப்பதோடு, சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும் எனவும் அதிகாரிகள் குமுறுவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
-சிவசெல்லையா







